திருவாரூர் மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் நெடுவாசல் கிராமத்தில் ஊர் மக்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்ட நடிகர் விவேக், தொடர்ந்து நெடுவாசல் கிராமத்திற்கு அருகிலுள்ள பெருமங்கலம், அன்னவாசல், சோழபுரம், மஞ்சக்குடி உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் தொடர்ந்து நடப்படும் எனக் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக், 'தமிழ்நாடு முழுவதும் அப்துல்கலாமின் அறிவுரைப்படி இதுவரை 33 லட்சத்து 24 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். தற்போது திருவாரூர் மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் இந்த ஊர் மக்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நடும் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அது காற்றில் பரவக்கூடியது அல்ல. ஒருவர் கை கொடுப்பதன் மூலமாக பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் மக்கள் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இனிமேல், தமிழ்நாட்டில் மக்கள் கைகொடுக்காமல் கையெடுத்து கும்பிடும் பழக்கத்தைத் தொடர வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க... 'இயற்கையை பூஜியுங்கள்' - நடிகர் விவேக்