சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தன் மீதான குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
அந்த பதிவில், “தற்போது நடந்துவரும் எஃப்.ஐ.ஆர் படப்பிடிப்பில் தினமும் 300 பேர் பணியாற்றுகின்றனர். நடிகர் என்பதால் பெற்றோரின் பாதுகாப்புக்காக தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளேன். படத்திற்காக தினமும் பல பேரை சந்திக்கிறேன். வீட்டிலேயே உடற்பயிற்சியும் செய்கிறேன். நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.
என்னை சந்திக்க வந்தவர்களிடம் வீட்டு உரிமையாளர்தான் தவறாக நடந்துகொண்டார். எனது படத்தின் ஒளிப்பதிவாளர் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினோம். அப்போது மது விருந்து அளிக்கப்பட்டது. நான் மது அருந்தவில்லை. தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதால், நான் இப்போது மது அருந்துவதில்லை.
ஆனால் அந்த நாளில் எங்களின் சுதந்திரம் தடைபட்டது. காவல் துறையினரின் விசாரணையிலும் நான் அமைதியாகவே பேசினேன். ஆனால் வீட்டு உரிமையாளர் தகாத வார்த்தைகளால் பேசியதால் நானும் சற்று கோபமாக பேசினேன். என் மீது தவறு இல்லை என்றதும் காவல் துறையினரும் சென்றுவிட்டனர்” என நீள்கிறது அந்த விளக்கம்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர். தொடர்ந்து குள்ளநரிக் கூட்டம், ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் ஆகிய வெற்றித் திரைப்படங்கள் மூலம் முன்னணி கதாநாயகனாக வலம்வரும் இவர், தற்போது எஃப்ஐஆர் எனும் படத்தில் நடித்துவருகிறார்.
இச்சூழலில் விஷ்ணு விஷால் மீது அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர் தினமும் குடித்துவிட்டு நண்பர்களுடன் கும்மாளமிட்டு வருவதாகவும், இதனால் தங்கள் நிம்மதி இன்றி இருப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தனர். இப்புகாருக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது விஷ்ணு விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.