நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் மேலாளராக பணிபுரிபவர் ஹரி கிருஷ்ணன். இவர், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் வசித்துவருகிறார்.
வழக்கம்போல், இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். நேற்று (ஜூலை 7) காலை நிறுத்தியிருந்த தனது காரை பார்த்தபோது கண்ணாடி உடைக்கபட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சில நாள்களுக்கு முன் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து கையாடல் செய்து விட்டதாக, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ஹரி கிருஷ்ணன் புகார் அளித்தார்.
இதன்பேரில் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், புகார் அளித்த மேலாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மோசடி தொடர்பாக ஹரி கிருஷ்ணன் அளித்த புகாரில் குறிப்பிட்ட நபர்களுக்கு, இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க...விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் கையாடல் புகார்!