இந்தியாவில் ஒவ்வொரு முறை ஒரு பிரச்னை விவாதமாய் எழும்போதும் மக்கள் அதுகுறித்தான தங்களது பார்வையையும், விமர்சனத்தையும் சமூக வலைதளங்கள் மூலமாக பதிவிட்டுக்கொண்டிருப்பார்கள். அப்படி தற்காலத்தில் விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் பேச்சுப்பொருளான ஒன்று நெப்போடிஸம். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலையை அடுத்து அவரது மரணத்துக்கு முக்கிய காரணியாக இருப்பது பாலிவுட் நடிகர்களின் நெப்போட்டிஸம்தான் என மக்கள் கொந்தளித்துக்கொண்டிருந்தனர்.
அந்தப் பேச்சு வந்ததிலிருந்தே பாலிவுட்டின் பல முன்னணி நடிகர்கள் (கான்கள், கபூர்கள், பட்கள்) இதில் சிக்கியுள்ளனர்.
இந்த நெப்போட்டிஸம் விவாதம் தென்னிந்திய ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை. பல முக்கிய நடிகர்களின் மகன்கள், மகள்கள் விவாதத்துக்கு உள்ளாகினர். அந்த விவாதத்தில் விஜய்யும் இடம்பெறுவார். நெப்போட்டிஸம் ஒருபுறம் இருந்தாலும் அதனால் துறையில் வந்து சாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் குறைவுதான்.
காரணம் ரசிகர்கள் திறமைமிக்க நடிகரை தேர்ந்தெடுக்க கற்றுக்கொண்டிருக்கின்றனர், திரைப்படங்கள் குறித்தான பார்வையை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜய் மீது பெருவாரியாய் விழும் விமர்சனமும் நெப்போட்டிஸம்தான். ஆரம்பத்தில் தோற்றத்துக்காக விமர்சிக்கப்பட்டாலும், தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு சினிமாவில் சாதித்து ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெருமை விஜய்யையே சாரும். அதில் அவர் ரசிகர்களுக்கும் பங்குண்டு.
நெப்போட்டிஸம் காரணமாக பாலிவுட் சினிமாவில் நுழைந்தாலும், நடிக்க குறிப்பாக மெத்தட் ஆக்டிங் கற்றுக்கொண்டு சாதித்துகாட்டியவர்களில் ரன்பிர் கபூர் குறிப்பிடப்படவேண்டியவர். இங்கே அவரை குறிப்பிடுவதற்கு காரணம், நெப்போட்டிஸத்தால் மட்டுமே ஒருவருக்கு திறமை இல்லை என்று நாம் கூறிவிடமுடியாது. அதிலும் விஜய் போன்று உச்சத்தில் இருக்கும் நடிகர், தந்தையின் (எஸ். ஏ. சந்திரசேகர்) வழிகாட்டலில் துறைக்குள் நுழைந்தவர் என்று எளிதாய் கூறிவிடமுடியாது.
'நடிக்க ஆசைபடுகிறேன்' என்று தந்தையிடம் கூறிவிட்டு சினிமாவில் நுழைந்த விஜய்யின் வழி எளிமையாக அமைந்துவிடவில்லை. அவர் கடந்துவந்த பாதையில் பல விமர்சனங்களும், கேலிப்பேச்சுகளும் இருந்தன. இருந்தும் அதை 'Ignore Negativity' என கடந்துவிட்டு ரசிகர்களுக்கான படங்களை கொடுத்தார் விஜய். ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்த விஜய்க்கு பெயர் எடுத்துக்கொடுத்தது 'பிரியமுடன்' திரைப்படம்தான்.
அதைத்தொடர்ந்து தனது 'சார்மிங்' புன்னகையால் 'குஷி', 'பிரியமானவளே', 'ப்ரண்ட்ஸ்', 'பத்ரி' போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார் விஜய். சற்று ஃபில் குட் பாணியில் இருந்த இந்தத் திரைப்படங்களில் இருந்து தனது ட்ராக்கை மாற்றிக்கொண்டு 'திருமலை', 'கில்லி' போன்ற திரைப்படங்கள் மூலம் கமர்ஷியல் திரைப்படங்களுக்கு தனது பச்சைகொடியை காட்டினார்.
'திருமலை' படத்துக்குப் பிறகு விஜய் மாஸ் ஹீரோ பட்டியலுக்குள் நுழைந்து தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டார். ஸ்டைலாக தம் அடிப்பது, ஒவ்வொரு படத்திலும் கடினமாக நடனமாடி ரசிகர்களை கவருவது என்று ரசிகர்களுக்காகவே படங்களை தேர்வு செய்தார் விஜய். இதுபோன்ற ஒரு பண்பினை நாம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் காணலாம். 'நான் இப்படி பண்ணா ரசிகர்களுக்குப் பிடிக்கும்' என்ற ரஜினியை போலவே, 'இது ரசிகர்களுக்கு பிடிக்குமா' என்று யோசித்தே காட்சிகளில் நடித்தார் விஜய்.
அந்த விஷயத்தில் ரஜினியை விஜய் ஃபாலோ செய்தாரா என்று தெரியவில்லை. அரசியல், மேடையில் 'குட்டி கதை' என விஜய்யின் ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவும் ரஜினியுடன் ஒப்பிடுவதாய் இருந்தது. அடுத்த சூப்பர் ஸ்டார் என்னும் அளவுக்கு விஜய் வளர்ந்திருந்தார். அதுவரை பாக்ஸ் ஆஃபிஸில் டாப்பில் இருந்த ரஜினியை 'கில்லி' போன்ற மாஸ் திரைப்படங்கள் வாயிலாக வசூலில் நெருங்கினார்.
இதற்கிடையில், ஆக்ஷன் ஹீரோ பட்டியலைவிட்டு அகன்று 'சச்சின்' போன்ற படங்கள் வாயிலாக கூலான, க்யூட்டான விஜயாகவும் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
என்னதான் ரசிகர்களின் மனம் கவர் நாயகனாக இருந்தாலும் திரைக்கதையை முக்கியமாக கருதிய ரசிகர்களால் விஜய் எதிர்பார்த்த சில படங்கள் தோல்வியை கண்டன. அதில் அவர் ஏராளமானவற்றை கற்றுக்கொண்டாரே தவிற, துவண்டுவிடவில்லை. ஒருமுறை செய்த தவற்றை திருத்திக்கொண்டு கதைகளை சரியாக தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்.
அப்படி அவர் தேர்ந்தெடுத்த நல்ல ஒரு கதையை கொண்டது 'நண்பன்' திரைப்படம். அதன் இசை வெளியீட்டு விழாவில் 'இந்தப் படத்திலிருந்து விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்' என்றார் இயக்குநர் ஷங்கர். '3 இடியட்ஸ்' திரைப்படத்தின் ரீமேக்காக இருந்தாலும் விஜய்யின் நடிப்பாலும், காமெடியாலும் இந்தத் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்து பல ஹிட் திரைப்படங்களின் வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளியது.
பல நடிகர்கள் தங்களது கதாநாயகப் பிம்பத்துக்கு களங்கம் வரக்கூடாது என நினைத்து பல காமெடி காட்சிகளை அர்த்தமற்றதாக்கிவிடுவார்கள். ஆனால் விஜய் அப்படி இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் 'காவலன்' திரைப்படம். 'யாரது' என்னும் பாடலில் எந்த நடிகரும் கால்பந்தால் அடிவாங்குவாரா, இல்லை பாத்ரூமில் ஜிப் மாட்டிக்கொண்டு அலறுவாறா என்று நாம் எண்ணிக்கூட பார்க்கமுடியாது. ஆனால் விஜய் சற்றும் யோசிக்காமல் அந்தக் காட்சிகளில் நடித்திருப்பார். காரணம் ரசிகர்கள்.
இதே 'காவலன்' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'பாடிகாட்' திரைப்படத்தில் இந்த காமெடி காட்சிகளை உதறி தள்ளியிருப்பார் சல்மான் கான். ஒரு நடிகன் எந்த அளவுக்கு தன்னை கெத்தாக காட்டிக்கொள்கிறானோ அதே அளவுக்கு தன்னை படத்தின் பாத்திரத்துக்காக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்கு விஜய் ஒரு உதாரணம். 'நமக்கான ட்ரெய்ன் வரணும்னா, நம்ம பளாட்பார்ம்ல நின்னுதான் ஆகணும்', என்று ஒரு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியிருப்பார். ஆம் ட்ரெய்னுக்காக (வாய்ப்புக்காக) காத்திருக்க வேண்டும். விஜய் காத்திருந்து திரைப்படங்களை தேர்வு செய்தார்.
இன்று உலகநாயகன் என்று கமல்ஹாசனையும், சூப்பர் ஸ்டார் என்று ரஜினியையும், தல என்று அஜித்தை ரசிகர்கள் புனை பெயர் வைத்து அழைக்கலாம். ஆனால் அண்ணா, இளைய தளபதி, தளபதி, தலைவா, என பல பெயர்களால் ரசிகர்கள் வெறித்தனமாய் விஜய்யை அழைக்கிறார்கள். விஜய் ரசிகர்களுக்கான நடிகனாய் இருப்பதே இதற்கு காரணம்.
கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாய் தனது இருப்பை தக்கவைத்து, ரசிகனுக்கு நம்பிக்கை நாயகனாய் இருக்கும் விஜய், சினிமாவுக்கென்றும், நடிப்புக்கென்றும் எதார்த்தமாக ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்பதே 'சினிமா' ரசிகனின் கோரிக்கையாய் இருக்கும்.!
இதையும் படிங்க...விஜய் பிறந்தநாளில், 'மாஸ்டர்' போஸ்டர் வெளியீடு