தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் (82) நேற்று (அக். 12) காலமானார். இவரது இழப்பிற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவக்குமார் தனது டைரி குறிப்பிலிருந்து ஒரு பக்கத்தைப் பதிவிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அந்த டைரி குறிப்பில், "சிவக்குமாரின் டைரி குறிப்பு 2017 ஆகஸ்ட் 20ஆம் தேதி. 1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த். ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலேயே பணிபுரிந்தவன்.
கே. பாலசந்தரால் மேடை நடிகராகப் பிரபலமடைந்தவர் வெங்கி என்கின்ற இந்த ஸ்ரீகாந்த். பாலசந்தருடைய 'மேஜர்காந்த்' என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமானபோது தனக்குச் சூட்டிக்கொண்டான்.
நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தவர். வாலி கவிதை உலகிலே கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும் நாகேஷும் தொடக்க நாட்களிலே சாப்பாட்டுக்குத் திண்டாட்டம் போட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு மாம்பலம் கிளப் ஹவுசில் அந்த இருவரையும் காப்பாற்றியவர்.
கதாநாயகனாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் 'சிலநேரங்களில் சில மனிதர்கள்' ஜெயகாந்தனின் கதை, 'ராஜநாகம்' போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர். என்னோடு 'மதனமாளிகை', 'சிட்டுக்குருவி', 'இப்படியும் ஒரு பெண்', 'அன்னக்கிளி', 'யாருக்கும் வெட்கமில்லை', 'நவக்கிரகம்' எனப் பல படங்களில் நடித்தவர்.
சமீபத்திலே 80 வயது பூர்த்தியாகி விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஸ்ரீகாந்த், அவரது துணைவியார் லீலாவதி, மீரா அவர் கணவர் ஜாக் அலெக்ஸாண்டர் பேத்தி காவேரி ஆகியோரைச் சந்தித்து ஓவியம் சினிமா என்று இரண்டு Coffee Table புத்தகங்களை கொடுத்து வாழ்த்திவிட்டுவந்தேன்.
இன்று அந்த அற்புத கலைஞர் அமரராகிவிட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்" என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.