சேலத்தில் திரைப்பட நடிகர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தென்னிந்திய நடிகர் சங்க பழைய கட்டடத்திற்கான இடத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு முன்பு பொறுப்பிலிருந்தவர்கள் விட்டுச் சென்றனர். அதனால் அந்த கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து விஷால் அந்த இடத்தை மீட்டு அதில் புதியதாக சங்க கட்டடத்தை கட்டி வருகிறார். 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை மீட்ட பெருமை நடிகர் விஷால் தலைமைக்கு உரியது. அதை யாராலும் மறுக்க முடியாது.
இப்போது மீண்டும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வர உள்ளது. அதிலும் விஷால் அணியே வெற்றி பெற வேண்டும். அதற்கு சேலம் நாடக நடிகர்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அப்போது தான் நடிகர் சங்க புதிய கட்டடம் விரைந்து முடிக்க முடியும்.
இந்த தலைமை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஷால் மூலம் நலிந்த நாடக நடிகர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவிலேயே நடிகர்களுக்கு என்று தனி சங்க கட்டடம் இருப்பது சென்னையில் மட்டும் தான் இருக்கிறது. அதேபோல் தமிழ்நாடு நடிகர்கள் அனைவரும் விஷால் தலைமைக்கு ஒத்துழைப்பு கொடுத்து யாரும் எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இன்னும் ஆறு மாத காலத்தில் அந்த கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று திறப்பு விழா காணும்” என்று கூறினார்.