டெல்லி : நாட்டின் 67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை (அக்.25) நடைபெற்றது.
இந்த விழாவில், இந்தியத் திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்த்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெறும் 51ஆவது நபர் ரஜினிகாந்த் ஆவார்.
இந்த விருதினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினிகாந்த்துக்கு வழங்கினார். 70 வயதான ரஜினிகாந்த், இந்த விருது விழாவில் தனது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்று கலந்துக் கொண்டார்.
இந்த விருதை, சத்யஜித் ரே, லதா மங்கேஷ்கர், அமிதாப் பச்சன், ஷியான் பெனகல், உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். அதேபோல் தமிழ் திரையுலகில் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் இமயம் (ரஜினிகாந்த் குரு) கே.பாலசந்தர் ஆகியோரும் பெற்றுள்ளனர்.
முன்னதாக தாதா சாகேப் விருது பெறுவது குறித்து சென்னையில் ரஜினிகாந்த் கூறுகையில், “இந்த விருது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, விருதை நான் எதிர்பார்க்கவில்லை, இந்தத் தருணத்தில் கே.பி. சார் (கே.பாலசந்தர்) இல்லாதது வருத்தம். மீண்டும் சந்திப்போம்” என்றார்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அனுராக் தாகூர், எல். முருகன் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'விருதை எதிர்பார்க்கவில்லை, கே.பி. சார் இல்லாதது வருத்தம்'- தாதா சாகேப் ரஜினிகாந்த்!