அமராவதி: வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு, ஆந்திராவில் தீவிர கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஆந்திராவில் உள்ள திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நாசமாகின. 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. பல்வேறு மாவட்டங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆந்திராவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். இதனிடையே திரைபிரபலங்களும் நிவாரண நிதி வழங்கிவருகின்றனர். அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் ஆந்திர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி ரூபாய் அளித்துள்ளார். முன்னதாக, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்டோர் தலா ரூ.25 லட்சம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனமழை காரணமாக ஆந்திராவில் 20 பேர் மரணம்