ஹைதராபாத்: வன மேம்பாட்டுப் பணிகளுக்காக தெலுங்கு நடிகர் பிரபாஸ் ரூ. 2 கோடி வழங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் டண்டிகா அருகிலுள்ள காஜிபள்ளி வனப்பகுதியை நடிகர் பிரபாஸ் தத்தெடுத்துள்ளார். சுமார் ஆயிரத்து 650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் ரூ. 2 கோடி வன அலுவர்களிடம் வழங்கினார்.
'பசுமை இந்தியா சவால்' திட்டத்தின்கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. நிதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கு நடிகர் பிரபாஸின் தந்தை, யூ.வி.எஸ். ராஜு பெயர் சூட்டப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ்குமார், தெலங்கானா மாநில சட்டம் மற்றும் எண்டோவ்ன்மென்ட் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் நடிகர் பிரபாஸ் அடிக்கல் நட்டார். பின்னர் வனப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் பகுதியை பார்வையிட்டார்.
இந்த வன மேம்பாட்டு பணி குறித்து நடிகர் பிரபாஸ், "எனது நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான, ஜோகினபள்ளி சந்தோஷ்குமாரின் செயல்பாடுகள், இந்த வனப் பகுதியைத் தத்தெடுக்க உத்வேகம் அளித்தது. வரும் காலங்களில் பணிகளின் முன்னேற்றத்தைப் பொருத்துக் கூடுதல் நிதியைத் தவணை முறையில் அளிப்பேன்" என்றார்.
வனப்பகுதியில் ஒரு சிறு பகுதி நகர்ப்புற வனப் பூங்காவாக மாற்றப்படும் எனவும், மூன்று தொகுதிகளாக உள்ள எஞ்சிய பகுதிகள் அரியவகை மூலிகைகள், தவரங்களைக் கொண்டிருப்பதால் அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருக்கும் எனவும் வன அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வன அலுவலர்கள் மேலும் கூறியதாவது:
மொத்தமுள்ள ஆயிரத்து 650 ஏக்கர் பரப்பையும் வேலி அமைத்துப் பாதுகாப்பதோடு, சுற்றுச்சூழல் பூங்கா பணிகளும் உடனடியாகத் தொடங்கப்படும். பூங்காவுக்கு வாசல் அமைப்பது, வெளியில் இருந்தே பூங்காவினுள் இருப்பனவற்றைப் பார்க்கும் வசதி செய்வது, நடைபாதைகள் உருவாக்குவது, பார்வைக் கோபுரங்கள் அமைப்பது, பூங்காவினுள் அமரும் கூடாரங்கள் ஏற்படுத்துவது, மூலிகைப் பண்ணை அமைப்பது ஆகிய பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அம்மா, கலைஞர் போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழ்த் திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்?': டி.ராஜேந்தர் கேள்வி