த.செ.ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் (2D Entertainment) தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim).
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 2ஆம் தேதி படம் வெளியானது. இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் கூட மிகப்பெரும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மலையாளத்தில் சூர்யாவுக்குக் குரல் கொடுத்த நரேன்
இந்நிலையில் மலையாளத்தில் சூர்யாவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பவர், 'சித்திரம் பேசுதடி' படப்புகழ் நடிகர் நரேன். அந்த அனுபவத்தை பற்றி அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "மிகப்பெரிய ஸ்டாரான சூர்யாவுக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற 'சூரரைப்போற்று' படத்துக்கும் நான் தான் டப்பிங் பேசினேன்.
'ஜெய் பீம்' படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால், நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது.
சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் ஃபிரேம் பை ஃபிரேம் கவனித்து பேசியது புது அனுபவமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது.
அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நன்றி. ஜெய்பீம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #WeStandWithSuriya: திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை சூர்யா மாற்றியுள்ளார் - வெற்றிமாறன்