நடிகர்கள் சுதீர் பாபு, நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வி'. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நாயகிகளாக அதிதி ராவ் ஹைதரி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், ஜெகதி பாபு, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மோகன் கிருஷ்ணா இந்திரா காந்தி இயக்கியுள்ள இப்படத்தில், அமித் திரிவேதி இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
சைக்கோ வில்லனாக நடித்துள்ள நானியை எதிர்த்து, சுதீர் பாபு எவ்வாறு மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதையாகும். இது நானிக்கு 25ஆவது படமாகும். முன்னதாக, 'வி' படத்தின் டீஸர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படம் திட்டமிட்டபடி திரையரங்கில் வெளியாகவில்லை.
இந்தச் சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் படக்குழுவினர் கூறவில்லை. இதனையடுத்து நடிகர் நானி இன்று (ஆக. 20) தனது ட்விட்டர் பக்கத்தில் 'வி' படத்தின் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அமேசான் ப்ரைமில் படம் வெளியாவதை உறுதி செய்தார்.
இது குறித்து நானி கூறியிருப்பதாவது, "கடந்த 12 ஆண்டுகளாக எனது படங்களைக் காண ரசிகர்களாகிய நீங்கள் டிக்கெட் எடுத்து திரையரங்கிற்கு வந்தீர்கள். இப்போது நான் உங்களுடைய வீட்டிற்கு வந்து நன்றி கூற உள்ளேன். 'வி' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.

கரோனா ஊரடங்கின் மத்தியில் இதுவரை பொன்மகள் வந்தாள், பெண் குயின், லாக்கப் ஆகிய தமிழ்ப் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.