மலையாளத்தில் 'ஆமென்', 'அங்கமாலி டைரீஸ்', 'ஈ.மா.யூ.', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் லிஜோ ஜோஸ் முக்கிய இடம் வகிக்கிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கேரள திரையுலக வரலாற்றின் மிக முக்கிய படங்களாக மாறியுள்ளது.
இவர் கடைசியாக இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை குவித்தது. மேலும் இப்படம் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பாக தேர்வானது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி செம்பன் வினோத்தை வைத்து 'சுழலி' என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து லிஜோ மம்முட்டியை வைத்து புதியப்படத்தை இயக்கும் பணியை தொடங்கியுள்ளார்.
இப்படத்துக்கு 'நண்பகல் நேரத்து மயக்கம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பழனியில் தொடங்கப்பட்டுள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மம்முட்டியே இப்படத்தை தயாரிக்கிறார். மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதுவரை தனது படங்களில் புதுமுகங்களை வைத்து இயக்கி வந்து லிஜோ, முதன் முறையாக பெரிய நடிகரான மம்முட்டியை வைத்து இயக்கவுள்ளார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உங்களுடைய மிகப் பெரிய ரசிகன் நான் - மணிரத்னத்தை கவர்ந்த இயக்குநர்