’ஆரண்ய காண்டம்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படைப்புக்காக காத்திருந்தனர் கோலிவுட் ரசிகர்கள். ‘அநீதி கதைகள்’ என தலைப்பு, விஜய் சேதிபதி திருநங்கையாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. தியாகரஜன் குமாராஜா, நலன் குமாரசாமி, மிஸ்கின், நீலன் ஆகியோரின் திரைக்கதை, பிஎஸ் வினோத் - ராம்ஜியின் ஒளிப்பதிவு, யுவனின் இசை, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங், ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஸ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற பெயரில் இதே நாளில் வெளியானது.
காமம் - லீலா
சூப்பர் டீலக்ஸ் படத்தின் மையப்புள்ளியாக காமம் இருக்கிறது. முன்னாள் காதலுடன் திருமணம் மீறிய உறவில் இருக்கும் காதலி, அடல்ட் படம் பார்க்கும் ஒரு மாணவர்கள் கூட்டம்... இந்த இரு சம்பவங்களை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் விரிகிறது.
பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு அடல்ட் படம் பார்ப்பது என்பது ‘அந்தியில வானம்’ பாட்டுக் கேட்பது போல ஒரு இனிமையான தருணம். இளையாராஜா இசையோடு அக்காட்சி விரிகிறது... அடல்ட் பட சீடியை வாங்க அவர்கள் கூச்சப்படும் தருணம் எல்லாம் பலரது பால்ய கால நினைவுகளை தூண்டும் விதாமாக அமைந்திருக்கும்.
அடல்ட் படம் பார்க்க ஆயத்தமாகி படத்தை போடுவார்கள், படம் பார்ப்பவனின் அம்மா (லீலா) படத்தில் வர... ஆத்திரத்தோடு அம்மாவை நோக்கி ஓடுகிறான்...
கற்பு - வேம்பு
கணவன் முகில் இல்லாத நேரம் முன்னாள் காதலனுடன் திருமணம் மீறிய உறவில் இருக்கிறாள் வேம்பு, காதலன் அப்போது இறந்துவிடுகிறான். இதிலிருந்து முகில் - வேம்பு தம்பதியினர் எப்படி தப்பிக்கிறார்கள் என நீழும் காட்சிகளில் லிஃப்டில் கரண்ட் கட்டானதும், முகில் ஜனநாயக ஆட்சியை குறை சொல்வான். வேம்பு கரண்ட் வரும் என்பாள், ஆமா இவ பெரிய பத்தினி... சொன்னதும் கரண்ட் வந்துரும் என முகில் சொன்னதும் கரண்ட் வரும்...
’கற்பு’ என்ற சொல்லை வைத்து பெண்கள் மீது நீண்டகாலமாக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறையை இக்காட்சி எளிதாக உடைத்துப் பேசுகிறது. பத்தினி சொன்னால் பச்சை மரம் பற்றி எரியும் என்பது ஸ்டீரியோடைப் தமிழ் வசனம்.
தேசத்தை நேசித்தால் தேசப்பற்று, மொழியை நேசித்தால் மொழிப்பற்று... ஆனால் சாதியை நேசித்தால் மற்றும் சாதிவெறி என முகில் பேசும் வசனத்துக்கு விமர்சனங்கள் எழுந்தாலும், ஒடுக்குமுறை எதன் மூலம் நிகழ்ந்தாலும் தவறு என்ற விதமாகவும் புரிந்துகொள்ளப்பட்டது.
பாலினம் - திருநங்கை - ஷில்பா
ஷில்பா எனும் திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் திருநங்கைகள் தரப்பிலிருந்து கடும் விமர்சனத்தை சந்தித்தது. திருநங்கைகள் சமுதாயத்தினர் இந்த சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்துகொண்டிக்கும் சூழலில், இதில் காட்டப்பட்டிருந்த காட்சிகள் அவர்களின் கசப்பான நினைவுகளைத் தூண்டுவது போல எடுக்கப்பட்டிருந்தது.
திருநங்கைகளை பொதுச் சமூகம் எப்படி பார்க்கிறது, அதிகாரவர்க்கம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதை ‘ஷில்பா’ போர்சன் பதிவு செய்திருந்தது.
கடவுள் - அற்புதம்
அற்புதம் போன்ற மனிதர்கள் இச்சமூகத்தின் சாபக்கேடு, கடவுள் கல் என்று கூறி நம்மை அறிவியலின் பக்கம் இழுத்துச் செல்கிறது சூப்பர் டீலக்ஸ்.
அறிவியல் - ஏலியன்
அறிவியல் துறையில் நீண்ட நெடுங்காலமாக சஸ்பென்ஸோடு நகரும் சப்ஜெக்ட் ‘ஏலியன்’. இதில் வரும் ஏலியன் சப்ஜெக்ட் எதற்கு என்ற குழப்பம் படம் பார்ப்பவர்களுக்கு வராமல் இல்லை. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் இந்தப் போர்சன் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
சமூக கற்பிதங்களை உடைத்து, மனிதர்களை நேசிக்கும் மனிதனாக வாழச் சொல்கிறது சூப்பர் டீலக்ஸ்... கலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புரிதலை ஏற்படுத்தும், அனுபவத்தை தரும். ’சூப்பர் டீலக்ஸ்’ தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை...