மும்பை: ஊடகம் மற்றும் கேளிக்கை துறையினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த 16 பக்கங்களுடன் கூடிய வழிகாட்டுதலை மத்திய கலாசார விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்கு இடையே படப்பிடிப்பு உள்ளிட்ட இதர காட்சி ஊடகம், திரைப்பட துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 16 பக்கங்களுடன் கூடிய வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் கலாசார விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
கரோனா பாதிப்பு ஏற்படாத வண்ணம் அலுவலகம், கூடாரங்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும். படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு குழுவினர்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதுடன், அரசு வெளியிட்ட விதிமுறைக்கு உட்பட்டு முற்றிலும் பூட்டப்பட்ட அறைகளில் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
படப்பிடிப்புக்கு தேவையான அளவு குறுகிய குழுவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனையும் தளத்தில் மேற்கொண்டு, படப்பிடிப்பு கருவிகளை கையாளுவதற்கு உரிய வழிகாட்டுதல்களுடன் முகக்கவசம், கையுறை போன்றவை தேவைப்படும்பட்சத்தில் வழங்க வேண்டும்.
ஒளி-ஒலி, சிகையலங்காரம், மின்சாரம், உணவு உள்பட அனைத்து துறை பணியாளர்களுக்கும் தேவையான நெறிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும். அவ்வப்போது அவர்களின் உடல் வெப்பம், சுவாச பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் கை கழுவுதல், சுகாதாரமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பெரிய அளவிலான கூடாரங்கள் அமைத்து, அதில் ஐந்து நபர்களுக்கு மேல் இல்லாதவாறு பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சீரான காற்றோட்டம் மிக்க இடங்களில் படப்பிடிப்பை நடத்தவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பேப்பர் பிளேட், கப்களை பயன்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.
லைட் ஸ்விட்ச், ரிமோட் ஸ்விட்ச் போன்றவற்றின் பயன்பாட்டுக்கு பிறகு, அதன் மீது கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
33 சதவீதம் பணியாளர்கள் மட்டும் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர பணிகளில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களுடன் பங்கேற்க வேண்டும். ஆரோக்ய சேது செயலியை நிறுவி உடல்நிலை குறித்த நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். தகுந்த இடைவெளியை உறுதிபடுத்தும் விதமாக கட்டங்கள் வரையப்பட வேண்டும். ஆம்புலன்ஸ், மருத்துவ பணியாளர்கள், பயிற்சி பெற்ற பராமரிப்பு பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தரும் இடத்திலும், இதர நுழைவு பகுதிகளிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள், வயது முதியவர்கள் உடல்நிலையில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.
விவாதங்கள், கேளிக்கை போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. படப்பிடிப்பின் இடைவேளை சமயங்களில் குழுவிலுள்ள அனைவரும் நோய் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். ஸூம், ஸ்கைப் போன்று செயலி மூலம் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளவும், நடிகர்கள், தொகுப்பாளர்கள் உடைகள், சிகையலங்காரம் போன்றவற்றை தாங்களே மேற்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறது.
வாரத்தின் 7 நாள்களும், 24 மணிநேரமும் அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டு, உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
திருமணம், மார்க்கெட், சண்டைக் காட்சிகள் போன்று பெரிய செட் அமைத்து எடுக்கப்படும் காட்சிகளை கரோனா பாதிப்பு குறையும்வரை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் சிகையலங்காரம் மேற்கொள்ளும்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிரஷ்கள், சீப்புகளை பயன்படுத்த வேண்டும். 10 வயதுக்குட்ட குழந்தைகளை வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது. தேவைப்பட்டால் குழந்தையுடன் ஒரேயொரு பாதுகாவலர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். விவாத நிகழ்ச்சியில் தனிப்பட்ட இடைவெளியை உறுதி செய்வதுடன், சரியான முறையில் கிருமி நாசனிகளை தெளிக்க வேண்டும்.
கரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் வண்ணம் குழுவினருக்கு தேவைப்பட்டால் தங்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், வீடு அருகில் இல்லாதவர்களுக்கு வாகன ஏற்பாடு செய்து தர வேண்டும். பணிக்கு வருபவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுகளை தாங்களே தயார் செய்து கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவற்றுடன் படக்குழுவிலுள்ள ஒவ்வொருவரிடமும், அவர்களது குடும்பத்தினர் சென்று வந்த இடம், சமீபத்திய பயணங்கள், சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தல்படி தனிமைப்படுத்தப்பட்டாரா உள்ளிட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு டிவி நிறுவனங்களும், திரைப்பட படப்பிடிப்புகளுக்கு படத்தின் தயாரிப்பாளரும் படப்பிடிப்பு நடைபெறும் பகுதி ஆட்சியரிடம் உரிய அனுமதியை பெற்ற பின்னரே படப்பிடிப்பு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.