தமிழ் சினிமாவில் காமெடி காம்போ அமைவது என்பது அவ்வளவு எளிதல்ல. காமெடி நடிகர்களின் நடிப்பானது அனைத்து படங்களிலும் எடுபடாது. அவர்களுக்கென்று சில இயக்குனர்கள், கதாநாயகர்கள் உள்ளனர்.
உதாரணமாக, இயக்குனர் பாலசந்தரின் படங்களில் நாகேஷின் காமெடியும், இயக்குனர் சுந்தர்சியின் படங்களில் கவுண்டமணி காமெடியும் வேறு கட்டத்தில் இருக்கும். அதுபோல் அமைந்ததுதான் இயக்குனர் சுராஜ், வடிவேலு காம்போ. முன்னதாக இயக்குனர் சுராஜ் தமிழ் சினிமாவில் சில படங்கள் பணியாற்றி இருந்தாலும், தலைநகரம் திரைப்படத்தின் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்தார்.
அப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரம் பட்டித்தொட்டி எங்கும் பரவியது. பின்னர் அதே வெற்றியுடன் இவர்கள் இணைந்த திரைப்படம் மருதமலை. இப்படத்தில் நடிகர் அர்ஜுனும், வடிவேலுவும் கொடுத்த அலப்பறை காட்சிகள் ரசிகர்களால் இன்றுவரை மறக்க முடியாது. திரைக்கதை வேறாக இருந்தாலும் 90 விழுக்காடு வடிவேலுவின் காமெடியை வைத்தே இப்படம் நகர்ந்திருக்கும்.
இந்நிலையில், தற்போது மருதமலை திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், சமூக வலைதளங்களில் ‘14 years of மருதமலை’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், வடிவேலுவும் இயக்குநர் சுராஜும் ’நாய் சேகர்’ படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.