பெங்களூருவைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி என்பவர், சிறு வயதிலேயே தானாக கணக்குகளைத் தீர்க்கப் பழகிக் கொண்டவர். பழைய நூற்றாண்டின் தேதியை சொன்னாலும்கூட, உடனே அதன் கிழமையைச் சொல்லிவிடும் அளவுக்கு கணக்கில் அவர் கில்லாடி. சிக்கலான கணக்குகளையும் உடனே தீர்த்து விடுவார்.
இவரது இந்த அதீத திறன் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. வேகமான மனிதக் கணினியாக இருந்தவர் கடந்த 2013ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, தற்போது இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
சகுந்தலா தேவியாக வித்யாபாலன் நடிக்கிறார். இதில், அவர் ஐந்து விதமான கதாபாத்திர தோற்றத்தில் நடித்துள்ளார். ரோனிஸ்குருவாலா தயாரிக்கும் இப்படத்தை அனு மேனன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சகுந்தலா தேவி படத்தில் வித்யாபாலன் தோற்றத்திற்கு பின்னால் ஸ்ரேயாஸ் மத்ரே, ஷாலகா போஸ்லே, நிஹாரிகா பாசின் ஆகிய மேக்கப் குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். இது குறித்து ஸ்ரேயாஸ் மத்ரே கூறுகையில், "சகுந்தலா தேவியின் வயதை அடிப்படையாகக்கொண்டு நான் வித்யாபாலனுக்கு திரையில் அது போன்ற தோற்றத்தைக் கொண்டு வருவதற்கு பல ஆராய்ச்சிகள் செய்தேன். குறிப்பாக, சகுந்தலா தேவியின் புகைப்படத்தை வைத்து வித்யாபாலனின் முகத்தைப் பொருத்த முயன்றேன். இதற்காக வித்யா பாலனிடமும் இயக்குநரிடமும் அதிக நேரம் விவாதத்தில் இருந்தோம். அதன் இறுதியாக உருவானதுதான் திரையில் நீங்கள் பார்க்கும் வித்யாபாலன்" என்றார்.
இவரைத் தொடர்ந்து ஷாலகா போஸ்லே கூறுகையில், "இந்த திரைப்படத்தை 1940 முதல் 2000 ஆண்டு வரை சகுந்தலா தேவியின் வாழ்க்கை காண்பிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சகுந்தலா தேவி நிறையா சிகை அலங்காரம் செய்துள்ளார். சகுந்தலா தேவியின் வீடியோக்களை நாங்கள் யூடியூப் மூலம் பார்த்து வித்யாவின் இறுதி தோற்றத்தை முடிவு செய்வதற்கு முன் பல ஆராய்ச்சிகளை செய்துள்ளோம்" என்றார்.
சகுந்தலா தேவி படத்தில் ஃபேஷன் டிசைனராக பணியாற்றிய நிஹாரிகா பாசின் கூறுகையில், "இந்தப் படத்தில் அவருக்கான ஆடைகள் வடிவமைப்பதில் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு படத்தில் நாங்கள் பணியாற்றும்போது அதற்கு முன்பே ஒரு விவாதம் அமைத்து ஆடை வடிவமைப்பு, மேக்கப் உள்ளிட்டவைகளை தீர்மானிப்போம்.
ஆனால் சகுந்தலா தேவியின் வாழ்க்கை குறித்து நாங்கள் ஆராயும்போது அவர் மேற்கொண்ட ஃபேஷன் அம்சங்கள் குறித்து கண்டுபிடித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஃபேஷன் வழியாக என்ன நடந்தது என்பது குறித்தும் ஆராய்ந்தோம். சகுந்தலா தேவி அந்தந்த காலக்கட்டத்தில் ஃபேஷனுடன் ஒத்துப்போகும் ஒரு பணக்காரர் ஆவார். எனவே, திரையில் வித்யாபாலனையும் அதேபோல் கொண்டுவருவதற்கு நாங்கள் கடுமையாக உழைத்தோம்" என்று கூறினார்.