மும்பை: தல அஜித்தின் சூப்பர் ஹிட் படமான வீரம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
2014ஆம் பெங்கல் ரிலீசாக வெளிவந்த வீரம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தல அஜித் - சிறுத்தை சிவா முதல் முறையாக கூட்டணி அமைத்த இந்தப் படம் காமெடி, ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சக படமாக அமைந்திருந்தது.
பட்டிதொட்டியெங்கும் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். நடிகர்கள் பாலா, விதார்த், சந்தானம், நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கிராமத்து பின்னணியில் அமைந்திருந்த இந்தப் படம் முழுவதிலும் தல அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், வேட்டி சட்டையுடனே தோன்றுவார்.
மங்கத்தா படத்தின் வெற்றிக்குப் பின்னர் பில்லா 2, ஆரம்பம் என வில்லத்தனம் மிக்க கேரக்டரில் தோன்றிய அஜித், முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் வீரம் படத்தில் அஜித் நடித்திருந்ததால், பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது.
இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. படத்துக்கு பச்சான் பாண்டே எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளனர்.
இதையடுத்து படம் 2020ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
ஏற்கனேவே கடந்த மாதம் வெளியான ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் அக்ஷய் குமார் - கீர்த்தி சனோன் ஜோடியாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.