பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராதே'. இதில் சல்மான் கானுடன் மேகா ஆகாஷ், திஷா பதானி, பரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'வெடரன்' என்னும் தென்கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ரம்ஜான் தினத்தன்று திரையரங்கில் இப்படம் வெளியாக இருந்தநிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக தள்ளிப்போனது.
இந்த நிலையில், இந்தாண்டு ரம்ஜான் வெளியீடாக இந்தப் படம் ஓடிடி தளமான 'ஜீ 5' இல் இன்று (மே 13) வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்குமாறும் இந்த படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட வேண்டாம் எனவும் சல்மான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, " ஒரு திரைப்படம் பலரின் உழைப்பாலும் முயற்சியாலும் உருவாகிறது. அப்படி வெளியாகும் படத்தை சிலர் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுகின்றனர். அதையும் சிலர் பதிவிறக்கம் செய்து பார்ப்பது வேதனைக்குரியது. 'ராதே' படத்தை நேரடியாக ஓடிடியில் கண்டுகளியுங்கள்.
ஒரு படத்தை திரையரங்கிலோ அல்லது ஓடிடி தளத்திலோ கண்டுகளிக்கும்போது நமக்கு கிடைக்கும் அனுபவம் வேறு மாதிரியானது. எனவே ரசிகர்கள் படத்தை இணைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.