பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோரது படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ராணி முகர்ஜி. தமிழில் இவர் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ஹேராம் படத்திலும் நடித்திருந்தார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தபோதே தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு திரையுலகைவிட்டு விலகியிருந்த இவர், 2014 ஆம் ஆண்டில் 'மார்தானி' என்ற படத்தில் சோலோவாக பாலியல் கும்பலை பிடிக்கும் கிரைம் பிராஞ்ச் உயர் காவல் அலுவலராக நடித்திருந்தார்.
திரில்லர் கதையாக உருவான 'மார்தானி' படம் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் பார்ப்பவரை பதைபதைக்கவைத்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகமாக 'மார்தானி 2' படத்திலும் நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளியன்று(டிச.13) வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதனையடுத்து இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. அதில் ராணி முகர்ஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது ராணி முகர்ஜியிடம் செய்தியாளர் ஒருவர் உங்கள் குழந்தை பருவத்திலும், சினிமாவுக்கு வந்த புதிலும் உங்களிடம் தவறாக நடந்துக்கொண்டவர்களிடம் உங்களை நீங்கள் எப்படி தற்காத்துக்கொண்டீர்கள் என கேள்வியெழுப்பினார்.
அதற்கு ராணி முகர்ஜி, ’என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றவர்களின் கன்னத்தில் நான் அறைந்துள்ளோன். இது ஒரு முறையோ, இரண்டு முறையோ இல்லை பலமுறை நடந்திருக்கிறது. நான் துர்கா தேவியை பார்த்து வளர்ந்தவள். நான் குழந்தையாக இருக்கும்போதே பலரை அறைந்துள்ளேன். இதற்கு என்னிடம் கணக்கு இல்லை.
பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் தனது வாழ்வை இழக்கும் அதே நேரத்தில் அவரது குடும்பத்தினர் இதனால் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மிகவும் கொடுமையானது. இதனால் இது போன்று தவறு செய்யும் குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு உரியவர்களே. அவர்கள் மன்னிக்க தகுதியற்றவர்கள்’ என்றார்.