கடந்த இரண்டு நாள்களில் பாலிவுட் பிரபலங்கள் இர்ஃபான் கான், ரிஷி கபூர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த நேரத்தில் பாலிவுட் மூத்த நடிகரான நசிருதீன் ஷாவும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்தச் செய்தி முழுவதும் பொய்யானது என அவரது மேலாளர் கூறியுள்ளார். ஈடிவி பாரத்திடம் பிரத்யேகமாகப் பேசிய அவர், “இது முற்றிலும் பொய்யானது. இந்த செய்தியை யார் பரப்பினார்கள் என்று எங்களுக்கு தெரியாது. நசிருதீன் நன்றாக இருக்கிறார்.
அவர், மும்பை - புனே இடையே உள்ள நகரில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் இருக்கிறார். நசீர் ஜி தேசிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தனது குடும்பத்தினருடன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள். தயவு செய்து இது போன்ற செய்திகளை உறுதிப்பாடு இல்லாமல் பரப்பாதீர்கள்” என்றார்
மேலும், நசிரூதினின் மருமகள் சாய்ரா ஷா ஹலீம் கூறுகையில், "நசிருதீன் ஷா நலமாகவும் ஆரோக்கியமாவும் இருக்கிறார். சிறிது நேரத்திற்கு முன்புதான் தொலைபேசி வாயிலாக அவர் உரையாடினார்" என்று கூறினார்.