கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனையடுத்து அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் திரையரங்குகளைத் திறக்க அனுமதித்துவருகிறது. தமிழ்நாட்டில் நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசு அங்கிருக்கும் திரையரங்குகளை இன்று (நவம்பர் 5) முதல் திறக்க அனுமதியளித்தது. திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும், வெளியிலிருந்து உணவுப் பொருள்களை எடுத்துவரக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது.
தீபாவளி நேரத்தில் அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.