அண்மையில் அமலா பால் நடிப்பில் தமிழில் வெளியான த்ரில்லர் படமான ‘ஆடை’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு, பாலிவுட் நட்சத்திரம் கங்கனா ரணாவத்தை அணுகவில்லையென அப்படத்தின் தயாரிப்பாளர் அருண் பாண்டியன் கூறியுள்ளார்
ஒரு இரவு விருந்திற்குப் பிறகு ஆளில்லா கட்டடத்தில் நிர்வாணமாகக் கண் விழிக்கும் அமலா பால், அதைத்தொடர்ந்து நடக்கும் திகில் சம்பவங்கள் எனத் தொடரும் இந்தத் திரில்லர் படத்தில், காமினி என்ற வெளிப்படையான பெண்ணாக அமலா பால் நடிக்க, ரத்னகுமார் இயக்கியிருந்தார்.
சுதந்திரத்தின் அளவீட்டை விளக்க முயன்ற விதத்தில் ஒருபுறம் இந்தத் திரைப்படம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டாலும், வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிக்கான இலக்கணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எடுக்கப்பட்ட விதத்தில் பாராட்டுகளையும் பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸில் வசூலைக் குவிக்கத் தவறினாலும், விமர்சகர்களின் பாராட்டுகளை இந்தத் திரைப்படம் கணிசமாகப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ”ஆடை திரைப்படத்தின் இந்தி ரீமேக் மூலம் நாங்கள் பாலிவுட்டில் கால் பதிக்கயிருக்கிறோம். ஒரு பிரபல பாலிவுட் நட்சத்திரத்தை இந்தப் படத்திற்காக அணுக நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கங்கனா ரணாவத்தை இதுவரை இந்த திரைப்படத்திற்காக அணுகவில்லை. இயக்குநர், பிற படக்குழுவினர் அனைவரும் விரைவில் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்" என்று அனைத்து மொழிகளின் ஆடை திரைப்பட ரீமேக் உரிமையை பெற்றுள்ள ஏ & பி குழுமத் தயாரிப்பாளர் அருண் பாண்டியன் தற்போதுத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: