விஜய் மல்லையா, நிரவ் மோடி, சுப்ரதா ராய், ராமலிங்கம் ராஜூ உள்ளிட்ட பொருளாதார ஊழலில் சிக்கிய தொழிலதிபர்கள் பற்றி விவரிக்கிறது பிரபல ஓடிடி தளத்தின் ‘பேட் பாய் பில்லியனர்ஸ்’ எனும் திரைப்படம். இதில் தன்னுடைய பெயர் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து பிகார் நீதிமன்றத்தில் சுப்ரதா ராய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து ‘பேட் பாய் பில்லியனர்ஸ்‘ படத்தை தயாரித்த பிரபல ஓடிடி தளம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், அங்கும் சுப்ரதா ராய்க்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா, இந்தியாவில் உண்மை கதைகளுக்கு இடம் கிடையாது. இதை எதிர்த்து நீங்கள் (பிரபல ஓடிடி தளம்) போராட வேண்டும். உங்கள் போராட்டம் உண்மை கதைகளை சொல்ல விரும்பும் அனைவருக்குமான போராட்டமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பாலிவுட் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.