இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதபடுபவர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், என்ற எம்.எஸ். சுவாமிநாதன். 1925ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணம் மாவட்டத்தில் பிறந்த சுவாமிநாதன், தனது சொந்த ஊரில் கல்வியை முடித்து விட்டு மருத்துவராக விருப்பம் கொண்டிருந்தார்.
ஆனால், 1943ஆம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரின் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. சுமார் 30 லட்சம் மக்கள் பசியின் கோரப்பிடியால் உயிரிழந்ததைப் பார்த்த அவர், வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என தனது பாதையை திருப்பிக் கொண்டார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜ கல்லூரியில் விலங்கியல் பட்டப்படிப்பு முடித்த இவர், மதராஸ் வேளாண் கல்லூரியில் வேளாண் அறிவியல் படிப்பையும் முடித்தார்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்று தனக்கு கிடைத்த ஐ.பி.எஸ் வாய்ப்பை உதறித் தள்ளிய இவர், யுனெஸ்கோ அமைப்பின் ஸ்காலர்ஷிப் பெற்று வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். நெல், கோதுமை, கிழங்கு ஆகியவற்றில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இந்திய வேளாண் ஆய்வுக் கழகம், சர்வதேச நெல் ஆராயச்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்துள்ள இவர், 1979ஆம் ஆண்டு மத்திய வேளாண் துறை தலைமைச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
தவிர, 1988ஆம் ஆண்டு சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் மையத்தின் தலைவராகவும் எம்.எஸ்.சுவாமிநாதன் பணிபுரிந்துள்ளார்.
இதையும் படிங்க: யு.பி.எஸ்.சி. தலைவராக பிரதீப் குமார் ஜோஷி நியமனம்