அறிவியல் அறிஞரும் கண்டுபிடிப்பாளருமான அலெக்சாண்டர் கிரஹாம்பெல் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் எனும் பகுதியில் 1847ஆம் ஆண்டு மெல்வில்லே பெல், எலிசா கிரேஸ் சைமொன்ட்ஸ் பெல் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.
12 வயதில் முதல் கண்டுபிடிப்பு:
- கிரஹாம்பெல்லின் தந்தையும், தாத்தாவும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற சொற்பொழிவாளர்களாக இருந்தனர். இதனால் ஈர்க்கப்பட்ட அவர் பேச்சு மற்றும் தகவல் தொடர்பியலை தனது பாடமாக எடுத்துப் படித்தார்.
- அவர் தனது 12 வயதில், உறவினர் ஒருவரின் தொழிற்சாலையில் தேங்காய் உறிக்கும் இயந்திரம் ஒன்றினை வடிவமைத்தார். இதுவே அவரது முதல் கண்டுபிடிப்பு.
- இந்த கண்டுபிடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரத்தினால் அவர் தொடர்ந்து, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
- கிரஹாம் பெல்லின் தாய், மனைவி இருவருமே காது கேளாதோர். இதன் காரணமாகவே அவர் கம்பிகளைப் பயன்படுத்தி ஒலி அலைகளின் மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
- தொடர்ந்து அவர், தனது தந்தை தயாரித்த செய்கை மூலமான தகவல் தொடர்புகளை பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணிபுரிந்துவந்தார்.
எண்ணிலடங்கா சாதனைகள்:
- கிரஹாம் பெல் முதன்முதலில், பயன்படுத்தக்கூடிய வகையிலான தொலைபேசியை கண்டறிந்த பிறகே அவர், மக்கள் மத்தியில் பிரபலமானார்.
- இவரது இந்த கண்டுப்பிடிப்பு தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிப் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
- இதையடுத்து இவர் பல எண்ணற்ற குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
- கிரஹாம் பெல் 1890களில் விமானப் பயணத்தில் தனது கவனத்தைத் திருப்பினார்.
- 1903ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் வெற்றிகரமாக இயங்கும் கட்டுப்பாட்டு விமானத்தை உருவாக்கிய பிறகும் அவர், தனது சோதனைகளைத் தொடர்ந்தார். இவருக்கு காற்றியக்கவியல் இறக்கைகள், புரோபல்லர் பிளேட்களை உருவாக்குவதில் அதிகளவு ஆர்வம் இருந்தது.
- இதையடுத்து 1907ஆம் ஆண்டில் விமானத்தில் மேலும் புதுமைகளை உருவாக்கும் விதமாக வான்வழி பரிசோதனை சங்கம் ஒன்றினை நிறுவினார்.
அந்த ஒரு நிமிடம்...
தொலைபேசியை கண்டுபிடித்த போது கிரஹாம் பெல் தாமஸ் வாஸ்டனுடன் பணிபுரிந்தார். அதுமட்டுமின்றி, இவர் ஏராளமான பறக்கும் இயந்திரங்கள், ஹைட்ரோஃபைல்கள் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளிலும் பணியாற்றினார்.
1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் கனடாவின் நோவா ஸ்கொட்டியாவில் உள்ள தனது தோட்டத்தில் உயிரிழந்தார். அவரை கல்லறைக்குள் வைத்தப்போது அமெரிக்கா, கனடாவில் உள்ள அனைத்து தொலைபேசி சேவைகளும் ஒரு நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டன. இது அவரது கண்டுபிடிப்புகளுக்கு மக்கள் அளித்த மரியாதையாக பார்க்கப்படுகிறது.