டஹிடி: பவளப்பாறைகள் என்பது கடலுக்கடியில் உள்ள சுற்றுச்சூழல் வாழ்விடமாகும். இந்த பவளப்பாறைகள் கால்சியம் கார்பனேட்டாலான பாலிப்களால் உருவாகின்றன. பாலிப்கள் என்பது தட்டையான காளான் போன்று வளரக்கூடிய திசுக்களாகும்.
பொதுவாக பவளப்பாறைகள் ஆழமற்ற, வெதுவெதுப்பான கடல் சூழலில் சிறப்பாக வளரக்கூடியது. சில ஆழமான பகுதிகளிலும் வளர்கின்றன. குறிப்பாக பவளப்பாறைகள் "கடலின் மழைக்காடுகள்" என்று அழைக்கப்படுகின்றன.
ஏனென்றால் கடலில் உள்ள சுமார் 25% விழுக்காடு மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகளையே சார்ந்துள்ளன. பவளப்பாறைகள் பலதரப்பட்ட உயிரினங்களுக்கு தங்குமிடமாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது. அதேபோல இனப்பெருக்க மற்றும் குஞ்சுகளை வளர்ப்பதற்கான தகுந்த சூழலை வழங்குகிறது.
சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பவளப்பாறை கூட்டங்கள் 7,000-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், முதுகெலும்பற்ற உயிரினங்கள், கடல் பாசிகள் உள்ளிட்ட தாவரங்கள், ஆமைகள், பாலூட்டிகளுக்கு ஆதாரமாக உள்ளன. இப்படி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக பவளப்பாறைகள் உள்ளன.
ரோஜா இதழ்களை கொண்ட அசாதாரண பவளப்பாறை
சில நாள்களுக்கு முன்பு தென் பசிபிக்பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு பாலினேசியாவின் டஹிடி கடற்பகுதியில் ரோஜா வடிவம் கொண்ட மிகப் பழமையான பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த பவளப்பாறை ஆழமான கடலில் வாளரக்கூடியது. குறிப்பாக, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாமல் தனது பண்டைய வடிவத்திலேயே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதன்முதலில் உள்ளூர் டைவிங் குழு, இதனை கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து பிரெஞ்சு பாலினேசியாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு செய்தி கொண்டு செல்லப்பட்டு, இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உள்ளூர் பவளப்பாறை ஆராய்ச்சியாளர் ஹெடூயின் கூறுகையில், இந்த ரோஜா வடிவிலான பவளப்பாறைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றன.
உலகலாவிய காலநிலை மாற்றத்தால் கடலில் அமிலத்தன்மை கூடியுள்ளது. ஆனால், அமிலத்தன்மையால் பாதிக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன, ஏன் பாதிக்கப்படவில்லை என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளன. கடலைப்பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும் என்பது மீண்டும் நிருபணமாகிவிட்டது" என்றார்.
இதையும் படிங்க: பால்வழி அண்டத்தில் உள்ள மாபெரும் வாயுக்கோள் கண்டுபிடிப்பு