சென்னை: புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலக்கூறுக்கு நிலையான மாற்றை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சென்னை ஐஐடியின் பயோடெக்னாலஜி துறை இணைப் பேராசிரியர் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவா இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்துள்ளார். இவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை அறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கேம்ப்டோதெசின் என்பது கேம்டொதெக்கா அக்யூமினாட்டா மற்றும் நோத்தபோடைட்ஸ் நிமோனியானா மரங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஆல்கலாய்டு ஆகும். தற்போதைய சூழலில், இந்த மரங்களின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகக் குறைந்துவருகிறது.
காரணம் ஒரு டன் கேம்ப்டோதெசினைப் பெற 1000 டன் இந்த மரங்களின் தாவரப் பொருள்கள் தேவைப்படுகின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளின் இந்த மரங்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு அளவு குறைந்துள்ளது. எனவே, புற்றுநோய் மருந்தான டோபோடோகன், இரினோடோகன் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலக்கூறின் நிலையற்றத் தன்மையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதற்கு மாற்றாக ஒன்றைக் கண்டுபிடிக்க சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்பத் துறை இணைப் பேராசிரியர் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஒரு நுண்ணுயிர் நொதித்தல் செயல்முறையை உருவாக்கியுள்ளனர்.
இது கேம்ப்டோதெசின் மாற்றான, நிலையான முறை என்பதனைக் கண்டறிந்துள்ளனர். இந்த முறை 100 தலைமுறைகளைக் கடந்து செயலாற்றும் வல்லமைப் படைத்தது என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இதனால், விலை குறைந்த புற்றுநோய் மருந்துகளை உருவாக்க முடியும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக அமைகிறது.