டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 2021 வெர்ஷன் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் பைக்கின் ஆரம்ப விலையாக ஒரு லட்சத்து ஏழாயிரத்து 270 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 159.7 சிசி என்ஜின் திறன்கொண்ட இந்த பைக், இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது.
டிஸ்க் பிரேக் வசதிகொண்ட ஆர்டிஆர்160 4வி வேரியண்டின் விலை ரூ.1,10,320 ஆகவும், டிஸ்க் பிரேக் அல்லாத ட்ரம் பிரேக்கை மட்டும் கொண்டிருக்கும் ஆர்டிஆர்160 4வி வேரியண்ட் ரூ.1,07,270-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த என்ஜினில் உள்ள ஓர் சிங்கிள் சிலிண்டர், அதிகபட்சமாக 17.63 பிஎஸ் பவரை 9,250 ஆர்பிஎம்மில் வெளியேற்றும் திறன்கொண்டது. முந்தைய மாடலைவிட, 2021 வெர்ஷன் பைக் 2 கிலோ எடை குறைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், டிஸ்க் வேரியண்டின் ஒட்டுமொத்த எடை 147 கிலோவாகவும், ட்ரம் வேரியண்டின் எடை 145 கிலோவாகவும் உள்ளது.
மேலும், இதில் இடம்பெற்றுள்ள கார்பன் ஃபைபர் பேட்டர்னிலான இரு நிற இருக்கை, க்ளா ஸ்டைல் பொசிஷனில் (கூர்மையான நகம் வடிவம்) எல்இடி ஹெட்லேம்ப் ஆகிய கூடுதல் சிறப்பம்சங்கள் பைக்கை பிரீமியம் மாடலாக மாற்றியுள்ளது.
இது குறித்து டிவிஎஸ் மேட்டார் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் மேகாஷ்யம் திகோல் கூறுகையில், "புதிய மாற்றங்களுடன் வெளியாகியுள்ள 2021 வெர்ஷன் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் சிறந்த சவாரி அனுபவங்களை நிச்சயம் வழங்கும்" எனத் தெரிவித்தார்.
ரேசிங் ரெட், நைட் பிளேக், மெட்டலிக் புளூ என மூன்று நிறங்களில் வெளியாகும் இந்த மோட்டார் சைக்கிளுக்கு, நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவில் இன்ஜீனியருக்கும் இருசக்கர வாகனத்திற்குமான காதல் கதை!