ஒரு நேர்மையான நிர்வாக அமைப்பு ஊழல்வாதிகளை களையெடுக்கும் என்று இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் கூறியிருக்கிறது. ஆணையத்தின் அறிக்கை முன் கூறிய அதே சீர்திருத்தத்தையே மீண்டும் கூறுகிறது. முரண்பாடாக, சீர்திருத்த ஆணையத்தை அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, ஊழலை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் புகழ் பெற்றது.
ஊழலைக் கட்டுப்படுத்துவதில் சீனாவை விட இந்தியா முதன்மையாக சிறப்பாக செயல்பட்டதாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் கூறியிருந்தது. இருப்பினும், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் சமீபத்திய அறிக்கை இன்று முற்றிலும் மாறுபட்ட நிலையை விவரிக்கிறது. உலகளாவிய ஊழல் போக்குகள் குறித்த அறிக்கைகளை வழங்கும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் கூற்றுப்படி, ஊழல் தரவரிசையில் 2014இல் இந்தியா 85வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு, இந்தியாவின் தரவரிசை மேலும் சரிந்தது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் நேர்மை பற்றிய ஆய்வில், டென்மார்க் மற்றும் நியூசிலாந்து 100க்கு 88 மதிப்பெண்களும், பின்லாந்து, சிங்கப்பூர், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து 85 விழுக்காடும் பெற்றன. இவை உலகின் மிகக் குறைவான ஊழல் நிறைந்த நாடுகள் என்பதை நிரூபிக்கிறது. இந்த ஆய்வில் இந்தியா 40 விழுக்காடு மதிப்பெண் மட்டுமே பெற்றது. உலகளாவிய சராசரியான 43ல், 31 ஆசிய-பசிபிக் நாடுகளின் சராசரி 45 ஆகும்.
இந்தியாவின் தரவரிசை ஆசிய-பசிபிக் சராசரியை விட மிகவும் மோசமாக உள்ளது. 42 மதிப்பெண்களுடன் சீனா 78 வது இடத்தைப் பிடித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் ஒரு பொருளாதார மற்றும் சுகாதார பேரழிவு மட்டுமல்ல, இது ஊழலின் விஷத்தைத் தூண்டியுள்ளது என்று தெரிவித்த டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல்களைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அரசுகளை குற்றம் சாட்டியது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, உலகளாவிய ஊழல் குறித்த ஆய்வு, ஊழலைப் பொறுத்தவரை 39 விழுக்காடு லஞ்ச விகிதத்துடன், இந்தியா முன்னணியில் உள்ளது என்று கூறியிருந்தது. இந்தியாவில் சாதாரண மனிதர்கள் உயர்மட்ட பரிந்துரை கடிதம் இல்லாமலோ அல்லது லஞ்சம் கொடுக்காமலோ அவர்களது எந்தவொரு வேலையையும் முடிக்க முடியாது என்ற உண்மை நிலைமையை பிரதிபலிக்கிறது. ஸ்வயம் சம்ருத் பாரத் (சுய சார்பு இந்தியா) இலக்கை அடைய ஊழல் மிகப்பெரிய தடையாக மாறியுள்ளது என்று கூறி கடந்த அக்டோபரில் ஊழலுக்கு எதிரான ஒரு முழுமையான போருக்கு அழைப்பு பிரதமர் விடுத்தார். அந்த போருக்கு தேசத்தை யார் தயார் செய்ய வேண்டும்?
இந்தியா கர்மபூமியாகும், இங்குள்ள பெரும்பாலான மக்கள் அனைத்து தவறுகளையும் எதிர்க்காமல், தங்களுடைய கர்மாவின் பலன்களிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று தங்களை சமாதானப்படுத்திக்கொண்டு செயலற்றவர்களாக இருக்கிறார்கள்,. இதன் விளைவாக ஊழல் என்ற நச்சு மரம் தனது வலுவான வேர்களை எல்லா இடங்களிலும் பரப்பியுள்ளது.
ஊழல் குறைந்தபட்ச அபாயத்துடன் அதிக வருமானத்தை வழங்கும் ஒரு தொழிலாகவும் மாறிவிட்டது. இது மக்களின் வாழ்க்கையுடனும் விளையாடுகிறது. நான்கு வாரங்களுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தில் மொராதாபாத் மயானத்தில் மழை பெய்ததில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த கொட்டகை 30 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
இந்த தொகையில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு லஞ்சம் கொடுத்த ஒப்பந்தக்காரர் தனது லாபத்தையும் மீதமுள்ள தொகையில் சரிசெய்ய வேண்டியிருந்தது. கட்டுமானத்தில் தரம் சமரசம் செய்யப்பட்டதால் உயிர்கள் பறிபோனது. எட்டு காவல்துறை அதிகாரிகளும், ஐந்து சுங்க அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி கண்காணிப்பை குறைக்காமல் இருந்திருந்தால் 1993 மும்பை குண்டு வெடிப்புகள் நடந்திருக்காது என்று உச்சநீதிமன்றமே கூறியிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய ஆண்டு வரவுசெலவுத் திட்டங்கள் மிகவும் ஆடம்பரமாக அறிவிக்கப்படுகின்றன. ஆனால் முன்னேற்றத்தின் தேர் அதன் பாதையில் பல பள்ளங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஊழல் இல்லாத நாடு அறியப்பட்ட டென்மார்க் போன்ற நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காடை பொதுப்பணி மற்றும் சேவைகளுக்காக செலவிடுகின்றன. அந்த சராசரியில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கூட ஒதுக்க முடியாது. அவ்வாறு ஒதுக்கப்படும் அந்த அற்பத் தொகைகள் கூட ஊழல் பெருச்சாளிகளுக்கு இரையாகின்றன.
ஊழலை ஒழிக்கும் நோக்கத்துடன் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட தகவல் உரிமைச் சட்டம் பயனற்றதாக இருக்கும்போது, இது ஊழலின் இருள் சூழ்ந்த அந்திநேரம் என்பதை தவிர வேறென்ன.
திரு. என். விதால் தலைமை ஊழல்தடுப்பு கண்காணிப்பாளராக இருந்த காலத்தில், என்.சி.சி யின் அடிப்படையில் இளைஞர்களுக்காக ஒரு தேசிய ஊழல்தடுப்பு படையை (NVC) பரிந்துரைத்தார். அந்த பரிந்துரை செய்யப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இருளைக் குற்றம் சாட்டிக்கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. பெரிய பணமதிப்பு இழப்பு நடவடிக்கைளை ஆதரித்தது போல ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள். இப்போது மோடி சர்க்கார் சங்க நாதம் ஒலிக்க வேண்டும்.