பாட்னா: பிகாரில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலின்போது பெண்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். இது தங்களுக்கு சாதகமான சமிக்ஞை என்று எதிர்க்கட்சிகள் கூறும்நிலையில், பெண்களின் ஆதரவு ஆளுங்கட்சியான நிதிஷ் குமாருக்கு கிடைத்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இதெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை, இந்த வாக்குகள் தேஜஸ்வி யாதவ்வுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளன என்ற கருத்து வலுப்பெறுவதையும் மறுப்பதற்கில்லை.
இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களின் பேட்டி மற்றும் அரசியல் நிபுணரின் கருத்தை பார்க்கலாம்.
பெண் வாக்காளர்கள் அதிகரிப்பு
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் 55.7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்களின் பங்கு 53 விழுக்காடு ஆகவும், பெண்கள் 58.8 விழுக்காடு ஆகவும் உள்ளனர். இது ஆளுங்கட்சிக்கு ஆதரவான சமிக்ஞையான நிதிஷ் குமார் கட்சியினர் காண்கின்றனர்.
ஏனெனில் நிதிஷ் குமார் தனது கட்சியின் ஒவ்வொரு பேரணியின்போது பெண் வாக்காளர்களை மையப்படுத்தியே பேசிவந்தார். மேலும், தனது அரசு முன்னெடுத்துள்ள பெண்கள் நலத் திட்டங்களையும் அவர் அடிக்கோடிட்டு காட்டினார். குறிப்பாக மது விலக்கு, பெண் குழந்தை கல்வி மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். அதேபோல் ஐக்கிய ஜனதா தளத்தின் இதர தலைவர்களும், “இருளில் இருந்து பெண்கள், குழந்தைகளை மீட்க நிதிஷ் குமார் முன்னெடுத்த திட்டங்கள்” குறித்து பேசினார்கள்.
இதெல்லாம் பெண்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க காரணமாக அமைந்திருக்கலாம். இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், தற்போது போட்டி, “நல்லாட்சியா, காட்டாட்சியா?, வளர்ச்சி அரசா, சோம்பேறி அரசா? என்பதற்கு இடையே நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சியில் மக்கள் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் மீண்டும் இருளை நோக்கி பின்நோக்கி செல்ல விரும்ப மாட்டார்கள். அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், அதே மனதுடன் வாக்களிக்க செல்வார்கள்” என்றார்.
மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் துணையுடன் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக்கு வருவார்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பிகார் சட்டப்பேரவை தேர்தல்; 8 அமைச்சர்களின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு!
இந்த நிலையில் பிகாரின் தற்போதைய நிலவரம் குறித்து எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் மிருதுன்ஜெய் திவாரி கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யாருடைய ஆதரவும் இல்லை. கடைசிகட்ட வாக்குப்பதிவின் போது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் சரணடைந்துவிட்டனர். மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தன்னை போன்று மாநிலத்தையும் சோர்வடைய செய்துவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிகார் மக்கள் நிறைய வாய்ப்புகளை வழங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டனர். கரோனா நெருக்கடி காலத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒருவரை கூட களத்தில் காணமுடியவில்லை” என்றார்.
சாதகமா- பாதகமா?
இதற்கிடையில், தேர்தலில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ அமைந்திருக்கலாம் என்கிறார் அரசியல் திறனாய்வாளரும், பேராசிரியருமான டி.எம். திவாகர்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “கடந்த காலங்களில் பெண்கள் நிதிஷ் குமாரை ஆதரித்தார்கள். அதேபோல் இந்தத் தேர்தலிலும் பெண்கள் நிதிஷ் குமாரைதான் ஆதரிக்க வேண்டும் என்ற உத்தரவாதம் கிடையாது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பிகார் தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு மாநிலங்களில் வேலை இழந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்.
அந்த வகையில், வேலை வாய்ப்பின்மை, வறுமை பெண்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆகையால் பெண்களின் வாக்குகள் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக திரும்பியிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், பெண்களின் வாக்கு அதிகரிப்பு ஆளுங்கட்சிக்கு ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியிருக்கும். எனினும் இந்த அளவீட்டில் சில மாற்றங்கள் இருக்கலாம்” என்றார்.
பிகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 28, நவம்பர் 3 ஆகிய தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்கள் நடைபெற்றன. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.7) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிகாரில் பெண்களின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி தேர்தல்”- நிதிஷ் குமாரின் பேச்சுக்கு பாஜகவின் அழுத்தம் காரணமா?