சமீபத்தில் தலித் பெண் ஒருவர் நான்கு ஆதிக்க சாதி ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிரிழந்தார். ஹத்ராஸில் நடைபெற்ற இக்கொடூர சம்பவம் நம் சகோதரிகளைப் பாதுகாப்பதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. நாம் எம்மாதிரியான சமூகக் கட்டமைப்பில் வளர்ந்து வருகிறோம் என்பதை அச்சம்பவம் பிரதிபலிக்கிறது. மதம், சாதி, பொருளாதாரத்தால் பிளவுபட்ட சமூகத்தில், அனைவரும் சமம் என்ற மகத்தான தத்துவத்தை அமல்படுத்தவதில் தோல்வி அடைந்ததன் விளைவாக, ஒருவர் மற்றொருவரை அடக்குமுறைக்குள்ளாக்குகின்றனர்.
ஆதிக்கவர்க்கத்தினருக்கு நெருக்கமாக இருந்தால் வேறுவிதமான பலன்களையும் பெறலாம் என்பதற்கு தொலைக்காட்சியில் கத்தும் ஒன்பது மணி ஊடகவியலாளரே எடுத்துக்காட்டு. பல்வேறு தரப்பு வாதங்களிலும் எதிர்க்கருத்துகள் மட்டுமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும். அரசியலமைப்பை அமல்படுத்தும் அமைப்பான நீதிமன்றத்தில்தான் முதல் குளறுபடு ஏற்படுகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வதற்கு வகுத்த கொள்கை ஏட்டளவில் இருப்பதே இதற்குக் காரணம். நிர்பயா வழக்கு அனைவரையும் எச்சரித்திருந்தாலும், 2013ஆம் ஆண்டு சக்தி மில்ஸ் கூட்டுப் பாலியல் சம்பவம், 2014ஆம் ஆண்டு படான் கூட்டுப் பாலியல் மற்றும் கொலை சம்பவம், 2015ஆம் ஆண்டு சிவகங்கை மற்றும் கந்தமாலில் நடைபெற்ற கூட்டு பாலியல் சம்பவங்கள், 2016ஆம் ஆண்டு புலந்த்ஷாஹர் கூட்டுப் பாலியல் சம்பவம், 2017ஆம் ஆண்டு உன்னாவ் கூட்டுப் பாலியல் சம்பவம் எனப் பெண்களுக்கெதிரான கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன.
கடந்த ஆண்டு நடந்த ஹைதராபாத் மருத்துவர் கூட்டுப் பாலியல் சம்பவம் போல் பக்சரில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. இதுபோன்ற எண்ணிலடங்காத சம்பவங்களுக்கு நம் அனைவரின் தோல்வியே காரணமாகும். இருப்பினும், ஆணாதிக்க சமூகமும், பாலியல் வன்முறைகளை இயல்பாகக் காட்டும் கலாச்சாரமும் மற்ற காரணங்களைக் காட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கு மிக முக்கிய விழுமியங்களாக உள்ளன. இதனைத் தடுத்த நிறுத்த உடனடி மாற்றத்தைக் காட்டிலும் அடிப்படை மாற்றங்களே அவசியமாகும்.
இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள குற்றவியல் விரிவுரையாளர் மதுமிதா பாண்டே, "வளர்க்கப்பட்ட விதமும் சூழலுமே பாலியல் குற்றங்களில் ஈடுபடக் காரணம் எனப் பெரும்பாலான குற்றவாளிகள் கூறுகின்றனர். இந்தியக் கலாசாரத்தில் ஆண்களை உயர்வாகக் கருதுவதன் காரணமாக இம்மாதிரியான குற்றங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். தாங்கள் செய்வது தவறு என்ற எண்ணத்தில் அவர்கள் அதனைச் செய்வதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா ஆணையம், "அரசியலமைப்புக்கு ஏற்ப அடிப்படை வசதிளை வழங்குவதில் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அதனை உறுதி செய்வதிலும் அரசு தோல்வி அடைந்துவிட்டது. சொந்த மக்களையே அரசு அந்நியப்படுத்திவிட்டது" எனத் தெரிவித்தது. இம்மாதிரியான சூழலில், மாடுகளைப் பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்த அரசு, மாடுகளின் பாதுகாப்பில் மக்களின் பங்கேற்பை உறுதி செய்ய மாட்டு வரி விதிக்கவுள்ளது. 2019ஆம் ஆண்டு, மக்கள் தொகையில், ஒரு லட்சம் பெண்களுக்கு குற்ற விகிதம் 62.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது, 2018ஆம் ஆண்டு 58.8ஆக இருந்தது. வளர்ந்து வரும் குற்றங்களின் பாலியல் வன்புணர்வு முதலிடத்தில் உள்ளது.
இம்மாதிரியான குற்றச் செயல்களுக்கு, தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. ஆனால், தூக்கு தண்டனையால் பாலியல் குற்றங்கள் குறையும் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு தூக்கு தண்டனை எப்போதும் தீர்வாகாது.
மெழுகுவர்த்திகளை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போது அவசியமாகிறது. மாற்றத்தை நம்மிடையே தொடங்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறுகிறார். எனவே, சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வியை நாம் நம்மிடமே எழுப்ப வேண்டும். சமூகக் கட்டமைப்பில் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு இடையே சமமாக அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் வகையிலான மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். ஆண்டாண்டுகளாக பெண்களை நடத்தும் முறை, சமூகத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் பங்கு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பாலின சமத்துவமின்மையை ஊக்குவிக்கும் உளவியலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.