வேலையாட்களைத் தேர்வு செய்வதில் முதலாளிகள் புதுப்புது யுக்திகளைக் கையாள்வது வழக்கம். ஆனால் ஒரு சிலரே பிறரின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு மனிதநேயத்தை கடைப்பிடிப்பார்கள். அப்படி ஒரு முதலாளி சீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வு அளித்து வருகிறார். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள உணவு விடுதியொன்று செவித்திறன் அற்றோரை வெயிட்டர் வேலைக்கு பணியாட்களாக நியமித்துள்ளது.
'பர்கிவ் பார்பெக்யூ' என்ற பெயரில் இயங்கும் இந்த விடுதியில் உள்ள வெயிட்டர்களின் கைகளில் கார்டுகள் இருக்கும். வரும் வாடிக்கையாளர்கள் அந்த கார்டுகளில் உள்ளக் குறிப்பு மற்றும் சைகைகள் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆர்டர்களை மேற்கொள்வார்கள். மொத்தம் 4 செவித்திறனற்றோர் பணிபுரியும் இந்த உணவு விடுதி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 20 - 30 வயதுக்குட்பட்டவர்களை பணியமர்த்தியுள்ள விடுதி, பணியாட்கள் பணிச்சூழலுக்கு தயாராகும் வண்ணம் சில மாதங்கள் பயிற்சியளிக்கிறது. இதன் மூலம் தங்களின் குறைபாடுகளைப் பற்றி தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கையுடன் பணிபுரியத் தயாராகின்றனர் ஊழியர்கள்.
இந்த எண்ணம் குறித்து உணவகத்தின் உரிமையாளர் லூலூ, நாட்டில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளைக் கருத்தில் கொண்டே இதுபோன்ற உணவகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. சீனாவில் உள்ள பல மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் வேலைபெறுவதில் பெரும் இன்னல்களைச் சந்திக்கின்றனர். எனவே விற்பனையை நோக்கமாகக் கொள்ளாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு தோல் கொடுக்கும் நோக்கத்திலேயே இந்த உணவகத்தை நான் திறந்துள்ளேன் என்கிறார் பெருந்தன்மையுடன்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் காவோ சியூட்டிங் என்ற பெண், உணவு விடுதி ஒன்று எங்களைப் போன்ற நபர்களுக்கு பணி வாய்ப்புகளை தருகிறது என்ற தகவலை என் நண்பன் மூலமே அறிந்துகொண்டேன். பணிச்சூழல் சிறப்பாகவுள்ளது. உணவு விற்பனையும் நல்ல முறையில் உள்ளது என்கிறார் மகிழ்ச்சியுடன்.
இவரின் புதிய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இதற்கு உதவப் பலரும் தற்போது முன்வந்துள்ளதாக உரிமையாளர் லூலூ தெரிவித்துள்ளார். இந்த உதவிகரங்களின் துணையுடன் விரைவில் இதுபோன்று 6 விடுதிகளைத் துவங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் லூலூ.