தாய்மையைப் போற்றும்விதமாக ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ‘உலக அன்னையர் தினம்’ கொண்டாடப்படுகிறது. அதன்படி, 2019 மே 12ஆம் தேதியான இன்று சர்வதேச அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.
எப்படி உருவானது அன்னையர் தினம்:
இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னி ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரைச் சேர்ந்த அன்னி மரியா ஜீவ்ஸ் ஜார்விஸ்ஸின் மகள் அன்னி மேரி ஜார்விஸ். இவர் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்க ”மதர்ஸ் டே ஒர்க் கிளப்” (Mothers’ Day Work Club) என்ற அமைப்பை உருவாக்கி, தாயுடன் சேர்ந்து நடத்திவந்தார். இதில் தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, சுகாதாரம், குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, போன்ற பல்வேறு பயிற்சிகளை அளித்துவந்தார்.
1905ஆம் ஆண்டு மேரி ஜார்விஸ்ஸின் அம்மா இறந்துவிட்டார். அவர் நடத்திவந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் ஒருநாள் அன்னையைப் போற்றுவதற்கு ”அன்னையர் தினம்” வரும் என்று கூறியிருந்தார். இதனை அன்று கவனித்த மேரி ஜார்விஸ் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில், மே 10, 1908ஆம் ஆண்டு அன்னையர்களை சர்ச்சுக்கு வரவழைத்து அன்றைய தினத்தை அன்னையர் தினமாக நினைத்து அவருக்கு பூச்செண்டுகளைப் பரிசாகக் கொடுத்தார். அன்று முதல் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியா, உள்ளிட்ட 70 நாடுகள் இதனைப் பின்பற்றுகின்றன.
தாயைப் போற்ற இந்த ஒருநாள் மட்டும் போதாது, எத்தனை பிறப்புகள் எடுத்தாலும் அது போதாது. நம்மை உலகுக்கு அடையாளம் காட்டிய அன்னையை இந்த தினத்தில் உணர்வோம். எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாமல் ஒவ்வொரு நாளும் அம்மாவைக் கொண்டாடுவோம்!