பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதும், வீட்டில் களேபரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடுமுறையை தங்களுக்கு விருப்பமான விளையாட்டை விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நண்பர்களுடன் விளையாடி உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதும் எந்த ஒரு விளையாட்டையும் விளையாட்டாகவே பார்க்கின்றனர். அதற்குள் இருக்கும் ஆபத்தை கண்டு கொள்ளாமல் கடந்து வருகின்றனர். அப்படியான ஒன்று தான் 'ஸ்கேட்டிங்' விளையாட்டு. குழந்தைகள் மிகவும் விரும்பி விளையாடக்கூடிய ஒன்றில் இதுவும் இடம் பெற்றுள்ளது. பொதுவாக இந்த விளையாட்டை 4 முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் தான் அதிகம் விளையாடுகின்றனர்.
ஸ்கேட்டிங் விளையாடும் போது குழந்தைகள் ஹெல்மெட் அணிவது அவசியம், கட்டாயமும் கூட. இதனுடைய முக்கியத்துவத்தை பெற்றோர்கள் குழந்தைகளிடம் அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் ஹெல்மெட் அணிவதை விரும்புவதில்லை, காரணம் அதை அணிவதால் சுலபமாக விளையாட முடியாது என்பது அவர்களுடைய எண்ணம். அதுமட்டுமல்லாமல் விளையாட்டின்போது மெதுவாக சென்று தன்னைத் தானே நிலையாக வைத்து கொண்டு, கால்களையும் நிலையாக வைத்துக் கொண்டு நிறுத்த வேண்டும். ஆனால் சில குழந்தைகள் விளையாடும் இடத்தில் போடப்பட்டிருக்கும் எல்லைக் கோடு வரை வேகமாகச் சென்று கையை அசைத்து நிறுத்துகின்றனர். அது திறமையானது தான், ஆனால் ஆபத்தானதும் கூட...
குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தான் ஸ்கேட்டிங் விளையாட்டின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் அதே சமயம் அதனுள் இருக்கும் ஆபத்தையும் கற்றுத் தர வேண்டும். ஆராய்ச்சியின் படி 80 சதவிகித குழந்தைகள் ஹெல்மெட் அணிவதை விரும்பவில்லை, அதனை அவர்களது பெற்றோர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.
பெரியவர்கள் வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்று அரசு எடுத்துரைக்கிறதோ, அதே சமயம் குழந்தைகளும் ஸ்கேட்டிங் விளையாட்டின்போது ஹெல்மெட் அணிவது அவசியம். விளையாடச் செல்லும் முன்பு ஹெல்மெட், கால் உறை(knee cup), கையுறை ஆகிய அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்து கொள்வது அவசியம். குறிப்பாக குழந்தைகள் விளையாடும் இடத்தை பெற்றோர்கள் பார்ப்பது நல்லது. பாதுகாப்பான இடத்தில்தான் குழந்தைகள் விளையாடுகிறார்களா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, ஒரு முறையாவது விளையாடுவதை பார்த்து வருவது சிறந்தது.
தேவையில்லாத விசயத்துக்கு அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்கும் பெற்றோர்கள், ஸ்கேட்டிங் விளையாடும் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருப்பது மிகவும் அவசியம். ஹெல்மெட் தானே என்று பெற்றோர்கள் அலட்சியப்படுத்த வேண்டாம். அவை குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.. பாதுகாப்பும் கூட.