வெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் தான் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் தொடங்கி தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் வரத் தொடங்கிவிடும். குளிர்காலத்தில் குழந்தைகள், முதியவர்களுக்குத் தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படியான இந்தக் குளிர் காலத்தில் 'அலார்ட் ஆயிக்கடா ஆறுமுகம்' என்ற வடிவேலுவின் வசனம் போல, நம்மை தற்காத்துக்கொள்ள சில டிப்ஸ்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் வாங்க!
- இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரங்களில் வெளியிடங்களில் சுற்றுவதை கூடுமானவரைத் தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டும் குளிர் தாக்காத வகையில் கம்பளி, காதில் பஞ்சு, மப்ளர் போன்றவற்றை அணிந்து குளிருக்கு குட் பை சொல்லுங்கள்.
- குளிர்காலங்களில் பல நோய்களை தவிர்க்க கூடுமானவரை நன்றாக காய்ச்சிய வெதுவெதுப்பான தண்ணீரையே பருகுங்கள். தொண்டையில் கரகரப்பு, வலி இருந்தால் கூட சமையல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.
- வெந்நீரில் சிறிதளவு அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்க வைத்து அருந்தினால் சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி போன்ற நோய்கள் எல்லாம் நம்மகிட்ட இருந்து ஒரு ரெண்டடி தள்ளியே நிற்கும்.
- குளிர் காலத்தில் நமது உடலின் சூட்டைத் தக்கவைத்துக்கொள்ள மூலிகை டீ, சுக்குக்காபி, புதினா டீ, இஞ்சி டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். குழந்தைகளுக்குத் தரும் பாலில், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ரோஸ் மில்க் போல, இது எல்லோ மில்க்னு சொல்லி பசங்கள்ட்ட கொடுத்துடுங்க.
- சூடான தண்ணீர் சரும வறட்சியை அதிகரிக்கும் என்பதால், மிதமான வெண் நீரை குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். தும்மல், தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள், சுடுநீரில் ஆவி பிடிக்கலாம்.
- குளிர் காற்று உள்ளே வரும் ஜன்னலோரங்கள், பால்கனி ஆகிய இடங்களில் அதிக நேரம் நிற்பதையும், மொட்டை மாடியில் தூங்குவதையும் ரொம்பவே தவிர்த்திடுங்க. குளிர் கால ஐன்னலோர காற்று எல்லாம் நமக்கு நாமே வைச்சிக்குற ஆப்பு வகையாறக்கள் தான்.
- குளிர்காலத்தில் பாத வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒரு பக்கெட் சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களைப் பத்து நிமிடங்கள் வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்து விட்டு மாய்ச்சுரைசிங் கிரீம் அல்லது ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவி உங்கள் பொன்னான பாதங்களை பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
- குளிர்காலம் வந்ததும் உங்கள் குளிர் சாதனப் பெட்டிக்கு ரெஸ்ட் கொடுத்து விடுவது நல்லது. முடிந்தவரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த உணவுப் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
- பச்சை வெங்காயம் சளி மற்றும் காய்ச்சலுடன் போராட உதவுவதாக கருதப்படுகிறது. சிறிது வெங்காயத்தை வெட்டி ஒரு டம்ளர் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம், ஊறவைத்து பின்னர் குடித்தால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
நாங்க சொன்ன இந்த டிப்ஸை எல்லாம் மறக்காம பாஃலோ பண்ணி, குளிர் சீசனை ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணிடுங்க மக்களே!