செய்தித் தாள், தொலைக்காட்சி மட்டுமல்லாமல் திரும்பிய பக்கமெல்லாம் 'ஒமைக்ரான்' என்னும் பெயர் தான் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரானின் பெயரை நாம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு முன்பாகவே, அது பல நாடுகளுக்கு பறந்து சென்று பரவி வருகிறது.
இதுவரை கரோனா முதல் அலை, இரண்டாம் அலையென முடங்கிக்கிடந்த நாம், இப்போது தான் சற்று மீண்டு வரத் தயாரானோம். ஆனால், ஒமைக்ரானின் வருகையால் நம் மனதுக்குள், மீண்டும் ஊரடங்கு போடப்படுமா? நாட்டின் எல்லைகள் மூடப்படுமா? பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுமா? போன்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
பலர் தங்கள் விடுமுறை சுற்றுலா திட்டங்களை தள்ளிவைத்து விடலாமா என்னும் சிந்தனையில் உள்ளனர். மேலும் பலர் நம்பிக்கையிழந்து தங்கள் மனநலனும், உடல்நலனும் என்னவாகும்? தங்கள் வாழ்க்கை எப்போது சீரான பாதையில் செல்லும் என மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன உளைச்சல் தேவையில்லையே!
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஆஸ்திரேலியாவில் செயல்படும் 24 மணி நேர சேவை தொலைபேசி எண்ணுக்கு ஒரு நாளைக்கு 3,505 அழைப்புகள் வந்திருக்கின்றன. இந்த சேவை தொடங்கப்பட்டு 57 ஆண்டுகளில் ஒரு நாளில் இத்தனை அழைப்புகள் வந்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 6,94,400 ஆஸ்திரேலியர்கள் இந்த சேவை எண்ணுக்கு அழைத்து தங்களது கஷ்டங்களைப் பகிர்ந்துள்ளனர். பெரும்பாலும் பொருளாதாரப் பிரச்னை, உறவு முறிவு தொடர்பான பிரச்னை, தனிமையாக உணர்வதாக, தற்கொலை எண்ணங்கள் வருவதாக என பல பிரச்னைகளைத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவான தொலைபேசி அழைப்புகளைக் காட்டிலும், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 30% அதிகமான அழைப்புகள் வந்துள்ளன. அந்த அளவிற்கு மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மனநலம் பேணும் அமைப்பான Think Tank தெரிவிப்பது என்னவென்றால், கரோனா காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள் என மெல்லிய மனம் படைத்த பலரும் உணர்வு ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக சொல்கிறது.
அதுமட்டுமல்லாமல் பணி உத்தரவாதம் இல்லாத வேலையில் இருப்பவர்கள், வேலை இல்லாமல் இருப்பவர்கள் பலரும் உடல் ரீதியாக, மன ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தரவுகள் கூறுகின்றன. அவை வெறும் தரவுகள் அல்ல; சம கால மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பாகும்.
நீடித்து வரும் இந்த நெருக்கடி மிக்க நோய்த்தொற்று காலத்தில், நாம் நமது மனநலத்தைப் பேணிக்காக்கும் வகையில் சிலவற்றை கடைப்பிடித்தால், 2022ஆம் ஆண்டில், நாம் எதையும் சமாளிக்கும் மனோதிடத்தைப் பெறலாம். நம் மன நலனுக்காக செய்து தான் பார்ப்போமே...
நம்மால் செய்ய இயன்றவை,
எதிர்மறை எண்ணங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள்:
ஒரு நாளில் நீங்கள் என்ன மாதிரியான தகவல்களை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என சுய பரிசோதனை செய்து பாருங்கள். நிச்சயம் நம் மனதைப் பாதிக்கும் வகையிலான செய்திகளை அதிகமாக கேட்டிருப்போம்.
பயம், பதற்றம் தரக்கூடிய சம்பவங்களை அறிந்து வைத்திருப்போம். இவை அனைத்துமே நம் மன நலனை அதிக அளவில் பாதிக்கும். நமது செயல்கள், நம் எண்ணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது; நமது எண்ணங்கள், நாம் எந்த விஷயங்களை எடுத்துக் கொள்கிறோமோ அதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் எதிர்மறையான செய்திகளை எடுத்துக்கொள்வதால் மனம் நம்மை பலவீனமாக உணரச்செய்கிறது.
ஒரு ஆய்வில், கணினி வாயிலாக தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எடுத்துரைக்கக் கூறிய போது பெரும்பாலானவர்கள் எதிர்மறை எண்ணங்கள் தோன்றியதாகவே தெரிவித்தனர். எனவே, நம்மைச் சுற்றி நேர்மறையான எண்ணங்களை கட்டமைத்துக் கொள்வது மிக அவசியம்.
புத்துணர்ச்சியைத் தேடிப் பயணப்படுங்கள்:
ஒவ்வொரு முறையும் நாம் நம்மை அறியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது, நம்மை மகிழ்விக்கும் ஏதோ ஒரு செயலை செய்வது அவசியமாகும். உதாரணமாக, நமக்கு சமைப்பது பிடிக்குமென்றால் அதைச்செய்ய வேண்டும், பாடல்கள் கேட்பது பிடிக்குமென்றால் அதைச் செய்ய வேண்டும், சிறிய நடைப் பயிற்சி நமக்கு புத்துணர்வைக் கொடுக்கும் என்றால் அதைச் செய்யலாம்.
மன அழுத்தத்தில் இருக்கும்போது நமக்கு பிடித்ததை செய்வது கூட சிரமம் தான். எனினும், நமக்கு புத்துணர்ச்சி கிடைக்க வேண்டியது மிக அவசியம். நம்மை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள பல நேரங்களில் நம்மால் மட்டுமே முடியும்.
என்றும் தொடர்பில் இருப்போம்; சமூக இடைவெளியுடன்!
மனிதர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைப்பது தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் பேசி, சிரித்து, அளவளாவி இருப்பதில் தான். அப்படியிருக்கையில், ஊரடங்கால் இது சற்று சிரமமானது. எனினும், கடந்த ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மற்றவர்களுடன் அதிகமாகத் தொடர்பில் இருந்தவர்கள் பெரிய அளவில் தனிமையை உணரவில்லை எனக் கூறுகிறது.
மனிதர்களுடன் உறவாடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்வோம்!
புரிதலே மன நலனை கட்டமைக்கும் கருவி:
கரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் வாழ்வதென்பது சிரமம் தான். ஆனால், நாம் இந்த சிரமமிகுந்த நாள்களுக்குப் பழகி இருக்கிறோம். ஆகையால், கோவிட் பற்றி சரியான தகவல்களைப் போதுமான அளவு தெரிந்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்பட்சத்தில் வல்லுநர்களின் அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டாலே போதும். நம் மன நலன் சீராக இருக்கும்.
பயத்தை விட்டுத் தள்ளுங்கள்:
தேவையற்ற பயம் நிம்மதியைக் கெடுக்கும். பாதுகாப்பாக உங்களது பணியினைத் தொடருங்கள்!
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்