'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 11 மாடல்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், "மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய நிகழ்வு! ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 மாடல்களை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஐபோன் 11 ஸ்மார்ட்போன்கள் கடைகளை வந்தடைந்ததாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்கூட்டியே ஐபோன் 11 உற்பத்தி இந்தியாவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஊரடங்கால் அது தாமதமானதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு 22 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. தற்போது, ஐபோன் 11 இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால் இந்த வரியிலிருந்து அதற்கு பொருந்தாதது. இருப்பினும், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் ஐபோன்களுக்கு எவ்வித விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது, ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 மாடல்கள் உற்பத்தி சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல ஐபோன் 7 மாடல் பெங்களூருவில் விஸ்ட்ரான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது
முன்னதாக, கரோனா தொற்று காரணமாக சீனாவின் பல்வேறு முக்கிய பகுதிகளும் முடங்கியது. இதனால் டெக் நிறுவனங்களின் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதே நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க சீனாவுக்கு வெளியே தயாரிப்பு தொழிற்சாலைகளை தொடங்க பல்வேறு நிறுவனங்களும் முடிவு செய்தன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தனது உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆசஸ் ROG 3: இது விளையாட்டுப் பிரியர்களுக்கான ஸ்மார்ட்போன்!