சீன தொழில்நுட்ப நிறுவனமான டென்சன்ட் Tencent அறிமுகப்படுத்திய பப்ஜி மொபைல் கேம், உலகளவில் 1 பில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மன அழுத்தத்தைக் குறைக்கவும், நேரத்தைக் கடக்கவும் முன்பெல்லாம் கேம் விளையாடிய நிலையில், தற்போது கேம் ஒரு வேலையாகப் பலருக்கும் உள்ளது. மொபைலில் கேம் விளையாடுவது சில கேமிங் பிரியர்களுக்கு அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.
அந்த வகையில், ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஒரே இடத்தில் அமரவைத்த பெருமை பப்ஜி கேமிற்கு உண்டு. அதற்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு சிலர் மணிக்கணக்கில் பப்ஜி கேம் விளையாடிவருகின்றனர்.
தற்போது, உலகில் அதிகமாகப் பதிவிறக்கம்செய்யப்பட்ட விளையாட்டுகள் Subway Surfers, Candy Crush Saga ஆகும். அந்த இரு விளையாட்டுகளுக்கு அடுத்தபடியாக பப்ஜி கேம் உள்ளது எனப் பகுப்பாய்வு நிறுவனமான தணிக்கை (சென்சார்) டவர் தெரிவித்துள்ளது. சீனாவைத் தவிர, மற்ற நாடுகளிலேயே 1 பில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது, பப்ஜியின் வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு, இந்தியாவில் பப்ஜி கேம் உள்பட பல சீன செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி, இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது. இருப்பினும், பல்வேறு வழிகளில் பப்ஜி கேமை இளைஞர்கள் விளையாடுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இதையும் படிங்க: வீடியோ கேம் கன்சோலை தயாரிக்கும் குவால்காம்