கோவிட்-19 தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் சமூகவலைதள பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் செய்திகளைச் சமூகவலைதளங்கள் வாயிலாகவே தெரிந்துகொள்கின்றனர். அதேசமயம், சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
சமூக வலைதளங்களில் வரும் போலி செய்திகளைப் படிக்கும் மக்களின் உயிருக்கே பல சமயம் ஆபத்து ஏற்படுகிறது. ஈரானில் மெத்தனால் குடித்தால் கோவிட்-19 தொற்று ஏற்படாது என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவலை நம்பி மெத்தனால் குடித்த 300 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுமாதிரியான போலி செய்திகள் குறித்து அவாஸ் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 100க்கும் மேற்பட்ட செய்திகள் போலியானவை என்று நிரூபிக்கப்பட்ட பின்பும்கூட அவை பல லட்சம் பேருக்குச் சென்றடைவது தெரியவந்துள்ளது. மேலும், பல செய்திகள் போலியானவை என்று நிரூபிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து பரவுவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் பரவும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த பேஸ்புக் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச அளவிலுள்ள பல்வேறு செய்தி நிறுவனங்களுடன் கைகோர்த்து போலி செய்திகளை விரைந்து நீக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது.
குறிப்பாக, வரவிருக்கும் காலங்களில் கோவிட்-19 தொற்று குறித்து தவறான தகவல்களைக் கொண்ட பதிவுகளை லைக் செய்தவர்களுக்கும் அந்த பதிவுகளில் கமெண்ட் செய்தவர்களுக்கும் எச்சரிக்கை மெசேஜ்களை அனுப்ப உள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: 9 லட்சம் முகக்கவசங்களை வழங்கிய விவோ!