கரோனா தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் - பதிவு செய்ய பேஸ்புக் தடை! - corona vaccine
மக்களிடத்தில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக, கரோனா தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் சமூக வலைதளங்களில் உலாவி வந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசிக்கு எதிரான பதிவுகளை கண்காணித்து அகற்றிட பேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
வாஷிங்டன்: கரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளை நீக்க பேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
உலகளவில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிரம் காட்டிவந்த அதே நேரத்தில், அதற்கு எதிரான கருத்துகளும், உரையாடல்களும் சமூக வலைதளங்களை தொற்றிக் கொண்டது.
ஒரு வழியாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், தடுப்பூசிக்கு எதிரான தகவல்களை பதிவிடும் வழக்கத்தை வலைதளவாசிகள் விடவில்லை. இதே நிலை நீடித்தால், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
சர்ச்சைப் பதிவு
இந்நிலையில், கரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் நோய் தாக்கும் என்று பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனோரா சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரோனா தடுப்பூசி குறித்து பொய்யான தகவலை பரப்பியதைத்தொடர்ந்து, அது தொடர்பான காணொலியை பேஸ்புக், யூடியூப் நிறுவனங்கள் நீக்கின. இது குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக், யூடியூப் நிறுவனங்கள், கரோனா தடுப்பூசி குறித்த தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருந்ததால் பதிவு நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கரோனா தடுப்பூசிக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம், அதில் தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் உடனடியாக நீக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதற்கான தனி தணிக்கைக் குழுவை அமைத்துள்ளதாகவும் நிறுவனம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொழில்முனைவோருக்கு ரூ.50 லட்சம் வரை கடன் - பேஸ்புக் புதுத்திட்டம்