கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க ஆன்லைன் ஷாப்பிங் தளங்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர்.
கணினியில் ஒரு சில க்ளிக்குகள் மூலம் வாடிக்கையாளர் தனக்குத் தேவையான எந்தப் பொருளையும் வாங்கலாம் என்பதால் இந்த ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
இப்படி ஆன்லைனில் நாம் வாங்கும் பொருள்களுக்கு பெரும்பாலும் கிரெடிட்/ டெபிட் கார்டுகளையும், ஆன்லைன் வங்கிச் சேவைகளையும் (Net banking) பயன்படுத்தி பணம் செலுத்துகிறோம். ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்துள்ள இந்தச் சூழ்நிலையை ஹேக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயலுகின்றனர்.
இதற்காக, camouflaged எனப்படும் கணினி வைரஸ் புரோகிராமை அவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இது நமது கிரெடிட்/ டெபிட் கார்டு நம்பர், சிவிவி நம்பர், மொபைல் நம்பர், ஆன்லைன் வங்கிச் சேவை குறித்து நாம் பதிவிடும் தகவல்களைத் திருடிவிடும்.
இப்படி திருடப்படும் தகவல்களை ஹேக்கர்கள் ஒரு நல்ல விலைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்றுவிடுவார்கள். அதைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மோசடிகளில் ஈடுபடுவார்கள். இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி என்பது கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துவருகிறது.
தப்பிப்பது எப்படி?
- ஆன்லைனில் பணம் செலுத்தும்போது எச்சரிக்கையுடன் இருங்கள்
- பணம் செலுத்தப்பட்டவுடன் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களைச் சரிபார்க்கவும்
- ஆன்லைனில் நீங்கள் பணம் செலுத்தும் தளம், பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ளவும்
- ஆன்லைனில் பணம் செலுத்துவதைத் தவிர்த்து முடிந்தவரை Cash On Deliveryஐ தேர்வு செய்யவும்
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் மே மாதம் வரை மும்பையில் மட்டும் 938 சைபர் குற்றங்கள் குறித்த புகார்கள் பெறப்பட்டுள்ளன. நாம் எச்சரிக்கையாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் நாமும் சைபர் குற்றவாளிகளுக்கு எளிதில் இரையாகலாம்.
இதையும் படிங்க: அடையாள திருட்டு - உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!