உலகம் முழுவதும் உள்ள மக்கள் அம்பேத்காரின்128 வது பிறந்தநாளை சிறப்பாக இன்று கொண்டாடி வருகின்றனர். அவர், யாருக்கும் அஞ்சாமல் தன் கொள்கையில் உறுதி மிக்கவராய் வாழ்ந்தார். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அம்பேத்கர் என்றால் இந்துத்துவ வெறியர்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் இன்றளவும் இருக்கிறது.
முகத்துக்கு நேராகவே காந்தியை எதிர்த்த அம்பேத்கர்:
காந்தியை முகத்துக்கு நேராக விமர்சித்த ஒரே தலைவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. 1931இல் காந்திக்கும் அம்பேத்கருக்கும் ஏற்பட்ட புனா ஒப்பந்தத்தின்போது காந்தியடிகள் அம்பேத்கரை இந்த பாரதத்தின் புதல்வர் என்றார். அப்போது 'அம்பேத்கர், எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் எனக்கு ஒன்று அப்படி இல்லை. நாய்கள், பூனைகளை விட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டுகிறோம். குடிநீர் பெற கூட உரிமை இல்லை. எந்த ஒரு சுயமரியாதை உள்ள தீண்டப்படாதவன் இந்த நாட்டை தன் நாடாக கருதுவான். இன்னல்களையும் அநீதிகளையும் சுமத்தியதே இந்த நாடு எங்களுக்கு செய்த பெரிய உதவி' என அம்பேத்கர் கடுமையாக காந்தியிடம் பேசினார்.
பெண்களுக்கான சம உரிமை...
இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரை இந்தச் சமுதாயம் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக பார்ப்பதுதான் வேதனை தரக்கூடியதாக இருக்கிறது. அம்பேத்கர் நவீன இந்தியாவின் சிற்பி என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்து மதத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் சாதிய கொடுமைகளை மட்டுமல்ல, இஸ்லாமிய மதத்தில் இருக்கும் பாகுபாடுகளை எதிர்த்து கேள்வி எழுப்பினார். இந்திய அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராக சட்டத்தை வகுத்த பொழுது பெண்களுக்கு சிறப்பு உரிமைகளைத் தருவதற்கான பிரிவுகளை ஏற்படுத்தினார். பெண்கள் அரசியல் பங்களிப்பு, கல்வியறிவு, சொத்துரிமை, விவகாரத்து உரிமை என அனைத்திலும் சம உரிமையை உறுதிப்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியறிவு வேலைவாயப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வியறிவு ஆகியவை கிடைக்க இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
இந்தியாவில் முதல் நீர்பாசன திட்டம்
பொருளாதார நிபுணர், கல்வியாளர், வரலாற்றாளர், அரசியல் செயற்பாட்டாளர், தத்துவவாதி, தொழிலாளர்- பாசனம்- மின்சாரத்துறை மற்றும் சட்ட அமைச்சராக இவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் டென்னஸி ஆற்றுப்பள்ளத்தாக்கு திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, முதன்முதலாக இந்தியாவில் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இவரது முதல் நீராதார திட்டம் இந்தியாவின் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றது. இவரது தொலைநோக்கு சிந்தனை யாரும் எட்டிப்பார்க்க முடியாத முதல் முயற்சியே. நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் நதிநீர் பகிர்வு பிரச்னையை தீர்த்து வைக்கும் என்பதை அன்றே தீர்க்கமான முடிவுடன் எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் மின்சார ஆணையத்தை அமைத்து உற்பத்தி திறன் அதிகமாகவும் விலை பொருள் குறைவாகவும் இருப்பதே இந்தியாவின் மின்சார கொள்கையாக இருக்க வேண்டும் என எண்ணினார். அம்பேத்கரின் கட்டுரைகள், எண்ணங்கள், எதிர்கால இந்தியாவினை மக்களாட்சியாக செயல்பட வைப்பதற்கானவை. அது மட்டுமல்ல குடிமையியல் பண்பும், மனித மாண்பும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. அரசியல், பொருளாதாரம், வரலாறு என அண்ணல் அம்பேத்கரின் பார்வை வளரும் தலைமுறைக்கு அறிவியல் பார்வையையும் சமூகத்தை எப்படி பார்க்க வேண்டும் என்ற பயிற்சியையும் தரக்கூடியது. சாதி ஒழிப்பிற்கு பொருளாதாரம் தடையாக இருக்கிறது என்பதை அழுத்தத்தோடு பதிவு செய்தார். பொருளதாரம் என்பது சமபங்கீடு பொருளாதாரம், சமூக பொருளாதாரம், அறநெறி சார்ந்த பொருளாதாரம், அரசியல் பொருளாதாரம், ஜனநாயக பொருளாதாரம் என்பதை பிரித்துக் காட்டினார்.
எட்டு மணி நேர வேலை....
மேலும், சமூக சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. அதற்கான பொறுப்பு குடும்பம், சமூகம், நாடு என எல்லா நிறுவனங்களுக்கும் உண்டு என்பது அவரது நோக்கமாக இருக்கிறது. வாக்குரிமை சுதந்திரம் வயதுக்கு வந்த ஒவ்வொரு குடிமகனும் அன்றாட வாழ்வில் பெற வேண்டிய உரிமை என்பதை வலியுறுத்தி அதனை சட்டமாகவும் இயற்றியுள்ளார். தொழிலாளர்களின் நலன் காக்க எட்டு மணி நேரம் வேலை, வேலைக்கேற்ற ஊதியம், விடுமுறை ஆகிய திட்டங்களை வடிவமைத்துள்ளார். இப்போது நாம் விவசாய உரிமைகள் குறித்து பல விபரங்களை பேசுகிறோம். ஆனால் அம்பேத்கர் அன்றே எல்லாவற்றையும் பேசிவிட்டார். விவசாயிகளுக்கு தேவையான நிதிஉதவி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான நீர், உரங்கள் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அதிக வட்டிக்கு கொடுக்கிற கும்பல்களை கட்டுப்படுத்துதல். தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு ஒப்படைக்க வேண்டும். கூட்டு விவசாயம், நிலங்களை பகிர்ந்து அளித்தல் என்று பல மாற்றங்கள் குறித்து பேசியிருக்கின்றார்.
அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கை
வரி, தொழில், கொள்கை அளவிலான நவீன மாற்றங்கள் என்று எல்லா தளத்திலும் அம்பேத்கரின் பொருளாதார பார்வை இருந்திருக்கிறது. ஆனால் பொருளாதார அறிஞர்கள் அம்பேத்கரை ஒரு பொருளாதார மேதையாக பார்க்காமல் கள்ள மௌனம் காக்கின்றனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியாசென், என் பொருளாதார தத்துவத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார். தந்தை பெரியார் எப்படி அம்பேத்காரை ஆசானாக ஏற்றுக் கொண்டாரோ, அதேபோன்றுதான் அமர்த்தியா சென்னும் அம்பேத்கரை பொருளாதார ஆசானாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.