யமஹா ஆர்15 வி3.0 ரக இருச்சக்கர வாகனம் இந்திய இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலமாக விளங்குகிறது. இந்நிலையில், சந்தையை வலுப்படுத்தும் விதத்தில், தனது ஆர்15 வாகனத்தின் நேக்கட் ரக மாடலான எம்டி-15 பைக்கையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய யமஹா முடிவு செய்துள்ளது.
கவரும் டிசைன், செயல்திறன் மிக்க ஆர்15 வாகனத்தின் செயல் திறன் ஆகியவை இதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த சூழலில், வரும் மார்ச் 15-ம் தேதி இந்த புதிய எம்டி-15 ரக வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஸிக்வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
யமஹா எஃப்.இசட். வரிசையிலான நேக்கட் ரக பைக் மாடல்களுடன் இது சற்றே உயர் ரக மாடலாக விற்பனை செய்யப்படும். மேலும், இந்த புதிய மாடல் பிற நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமின்றி, யமஹாவின் எஃப்.இசட். வரிசை மாடல்களுக்கும் நெருக்கடி கொடுக்கும் என தெரிகிறது.
சிறப்பம்சங்கள்:
- உயர்த்தப்பட்ட அமைப்பிலான கைப்பிடி
- எல்இடி முகப்பு விளக்குகள்
- இரட்டை இருக்கை அமைப்பு
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
- ஸ்லிப்பர் கிளட்ச்
- டூயல் சேனல் ஏபிஎஸ்
- 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினுடன் அதிகபட்சமாக 19.3 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
- 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
- 1,335 மிமீ வீல்பேசையும், 135 கிலோ எடை கொண்டதாக இருக்கும்
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட யமஹா எம்டி-15 தனித்துவமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய யமஹா எம்டி-15 பைக் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் இடையிலான விலையில் (தில்லி விலை) எதிர்பார்க்கப்படுகிறது.
இது 155சிசி மாடலாக இருந்தாலும், விலை அடிப்படையில் 200சிசி மாடல்களுடன் போட்டி போடும். பஜாஜ் பல்சர் என்எஸ்200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் கேடிஎம் 125 டியூக் பைக் ஆகிய மாடல்களுக்கு பெரும் போட்டியாக இருக்கும்.
தற்போது ரூ.5,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு முன்பதிவு நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்திய சாலைகளில் பயன்பட தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில்தான் யமஹா எஃப்.இசட். பைக் மாடல்கள் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய யமஹா எம்டி-15 பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.