ஹைதராபாத் : பொதுவாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நெய்விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் கைகூடும். ஆடி வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமியை வரவேற்க வேண்டும்.
வீட்டு வாசலில் லட்சுமிக்குரிய தாமரைக் கோலம், இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் ஆகியவற்றில் ஒன்றை வரைய வேண்டும். அதன் கீழே ‘திருமகளே வருக’ என்று கோலமாவில் எழுதி வைக்கலாம்.
அதேபோல் ஒரு காரியத்தை செய்யும்போது சக்தியை வணங்கிவிட்டு செய்யலாம். சக்தி இருந்தால் காரியத்தை முடி, இல்லையேல் சிவனே என்றிரு என்பார்களே நினைவிருக்கிறதா?
மேலும், ஆடி மாதத்தில், உலகில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட சக்தியாக அம்மன் வெளிப்பட்டார் என்பது புராணக் கூற்று. ஆகையால் இக்காலத்தில் அம்மனை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவரும், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதுமட்டுமின்றி ஆடி மாதத்தில் வானியல் ரீதியாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அதாவது சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே இந்த மாதத்தில் திருமணங்கள் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.
மேலும், இந்த மாத தொடக்கத்தில், வெயிலின் வெப்பம் குறைந்து, பருவமழை தொடங்குகிறது. இந்த நேரத்தில்தான் மேற்கு கடற்கரையில் மழைப்பொழிவு உச்சமாகவும், கோடைகாலத்தில் சுருங்கியிருந்த குளங்களும் நிரப்பப்படுகின்றன. பெரும்பாலும் அவை முழு அளவை எட்டியிருக்கும்.
அறிவியல் ரீதியாகவும் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்துகின்றனர். இக்காலத்தை தட்சியாணம் என்பார்கள். இக்காலம் தமிழ் மாதமான ஆடியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி உள்ளிட்ட ஆறு மாதங்களும் தட்சிணாயன காலங்கள் என்றழைக்கப்படுகின்றன. இக்காலங்களில் சூரியன் கதிர்வீச்சு குறைந்து, இரவில் குளிர்ச்சி அதிகமாக காணப்படும்.
பொதுவாக ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டி மகாலட்சுமியை பூஜித்து வரலட்சுமி நோன்பு மேற்கொள்வார்கள். தேவியின் பாதங்களில் திருமாங்கல்ய சரடு வைத்துப் பூஜை செய்து வணங்கினால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்.
மேலும், ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும் என்றும் கடன் பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதையும் படிங்க : ஆடி பௌர்ணமி- வழிபாடும் மகிமையும்!