தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தாமரை, மணிமேகலை ஆகியோர் சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், 'தென்காசி மாவட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் கறவை மாடு மற்றும் தையல் இயந்திரம் வாங்கிக் கொடுக்க வங்கிகளில் கடன் பெற்று தருவதாகக்கூறி , விண்ணப்பிக்கும் நபர்களிடம், ஒருவருக்கு ரூ.1,000 மற்றும் ரூ.500 என்று வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த வசூலை சேலத்தைச் சேர்ந்த வெண்ணிலா (47), அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் (37) செய்து வருகிறார்கள்.
இதேபோல் இருவரும் தென்காசி மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளனர். பல மாதங்களாகியும் கறவை மாடுகள், தையல் இயந்திரங்கள் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி, மோசடி செய்துள்ளனர்' என்று புகார் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகார் மனுவின் மீது சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் அமுதா விசாரணை நடத்தினார்.
இதில், அகில உலக பெண்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் சேலம், ஈரோடு, கடலூர், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெண்களுக்கு தையல் இயந்திரம், கறவை மாடு வாங்கித் தருவதாக வெண்ணிலா மற்றும் முத்துக்குமரன் ஆகிய இருவரும் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வெண்ணிலா மற்றும் முத்துக்குமரன் ஆகியோரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து ரூ.40 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரின் வங்கிக் கணக்கு பரிமாற்ற விவரங்களை காவல் துறையினர் தற்போது சேகரித்து வருகின்றனர். மேலும், இவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கட்டட மேஸ்திரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் கைது