புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளைஞர். அதே பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், காதலிக்கும் காலத்திலிருந்தே பெண் மறுத்த போதிலும், அவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இளைஞர் சில நாள்களாக, இளம்பெண்ணின் அலைபேசி அழைப்பை ஏற்காமல் இருந்துவந்துள்ளார். அதே சமயம் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளார்.
இதனை அறிந்த இளம்பெண், கடந்த 11ஆம் தேதி, இளைஞர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்படி, இளைஞரை அழைத்து காவல் துறையினர் விசாரணை செய்ததில், அவர் தன் காதலியை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். தொடர் விசாரணையின் அடிப்படையில், இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
மருத்துவப் பரிசோதனைக்காக, அந்தப் பெண்ணையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: சிறார் காதல் திருமணம்- காவல் துறை விசாரணை