திருப்பூர்: அவிநாசியை அடுத்து தண்டுக்காரன் பாளையத்தில் இன்று (டிச.25) பிற்பகல் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எட்டு வயது மதிக்கத்தக்க சிறுமியை விட்டுச் சென்றுள்ளார்.
மயக்க நிலையில் இருந்த அச்சிறுமியை கண்ட அப்பகுதி மக்கள் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர்.
அப்போது, சிறுமி மூச்சுத் திணறலுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், “அச்சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் இல்லாததும், வலிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம்” எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவலர்கள் தரப்பில், “அப்பகுதியில் கோயில் முன்பு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், ஒரு பெண், இந்தச் சிறுமியோடு தான் கொண்டு வந்த பைகளை அப்பகுதியில் போட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் அந்தப் பையில் இருந்த விளையாட்டு சாமான்கள் வாங்கிய பில்லின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள ஒரு கடையில் நேற்று(டிச.24) விளையாட்டு சாமான்கள் வாங்கியதும், அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் இந்த பெண் சிறுமியுடம் வந்து விளையாட்டு சாமான்கள் வாங்கியது அக்கடையின் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.
அப்போது அந்தச் சிறுமி நல்ல உடல்நிலையில் விளையாடிக்கொண்டிருந்ததாக அக்கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பெண், சிறுமியுடன் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போட்டோவாக எடுத்து கர்நாடக மாநில காவல்துறையினர் எங்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்தப் போட்டோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்து மதத்திற்கு மாறிய இஸ்லாமியருக்கு கொலை மிரட்டல்!