கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், கொலை செய்யப்பட்ட சிறப்பு துணை காவல்ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தவுபிக், அப்துல் சமீம், காஜா மொய்தீன் என மூவர் சந்தேகத்தின் அடைப்படையில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு சிம் கார்ட் வாங்கி கொடுத்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 பேரை கியூ பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.
இதில் கோயம்பேட்டைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை தேனியில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ விற்கு மாற்றப்பட்டதையடுத்து நேற்று காலை கேரளாவைச் சேர்ந்த துணை ஆய்வாளர் உமேஷ் ராய் தலைமையில் 10க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அலுவலர்கள் கோயம்பேட்டில் உள்ள ராஜேஷ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ராஜேஷின் மனைவி, மாமியார் மற்றும் அவரது அம்மா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, அங்கிருந்தவர்களை செல்போன் பேச அனுமதிக்கவில்லை என்பதும் சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் சிம் கார்டு வாங்க பயன்படுத்தும் விண்ணப்பங்கள், அடையாள அட்டைகள், முகவரி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
போலியான ஆவணங்கள், சிம்கார்டுகள், அதிக விலைக்கு கொலையில் குற்றம்சாட்டப்பட்டவற்களுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் சிறையில் வைத்து என்.ஐ.ஏ. அலுவலர்கள் நடத்திய விசாரணையில் ராஜேஷ் ஏர்செல் சிம்கார்டு நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்ததும், ஏர்செல் நிறுவனம் மூடியவுடன், தனியாக சிம்கார்டுகளை வாங்கி விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி மண்ணடி, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் சிம்கார்ட்டுகளை விற்பனை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.
அப்போதுதான் அவருக்கு, வில்சன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு போலியான ஆவணங்கள் மூலம் அதிக விலைக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
என்.ஐ.ஏ. அலுவலர்களின் இந்த திடீர் சோதனையால் சென்னை கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : மயக்கும் பெண் குரல்... மயங்கிய ஆண்கள்... திணறிய காவல்துறை...!