கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கட்டக்கோபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவகாமசுந்தரிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு உடல்நிலை பிரச்னை காரணமாக சிவகாமிசுந்தரி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ரவீந்திரன் எட்டு ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் ஆனந்தாப்பூர் மாவட்டம் தர்மவரம் பகுதியைச் சேர்ந்த நாக ஷில்பாவும் ரவீந்திரனும் இந்து முறைப்படி திருமணமும், பதிவுத்துறையில் பதிவு செய்தும் திருமணம் செய்தகொண்டு திருக்கோவிலூரில் வாழ்ந்துவந்தனர்.
இந்நிலையில் ரவீந்திரனின் தம்பி மோகன்ராஜ் நாக ஷில்பாவுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதைப்பற்றி நாக ஷில்பா, ரவீந்திரனிடம் கூறியபோது அதனை அவர் பொருட்படுத்தாமல் இருந்ததால் அவருடன் சண்டை போட்டுக்கொண்டு சொந்த ஊரான ஆந்திரா மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
ஒரு மாதம் கழித்து கரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாக ஷில்பாவால் திருக்கோவிலூருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சில மாதங்களாக சொந்த ஊரிலேயே இருந்துள்ளார். பின்னர் கரோனா ஊரடங்கு தளர்த்திய பின் சில நாட்களுக்கு முன்பு ஷில்பா தனது கணவரை பார்ப்பதற்கு திருக்கோவிலூர் வந்துள்ளார்.
அப்போது அங்கு கணவர் இல்லாததால் அவருடைய தம்பி மோகன்ராஜின் கடையில் இருப்பார் என்று நினைத்து கடைக்கு சென்று பார்த்தபொழுது அங்க கடையில் வைக்கப்பட்டிருந்த ரவீந்திரன் படத்திற்கு மாலை அணிவித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், தனது கணவருக்கு என்ன ஆனது அவரது படத்திற்கு ஏன் மாலை அணிவித்து இருக்கிறீர்கள் என்று மோகன்ராஜிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, உன் கணவர் ஜூன் மாதமே இறந்துவிட்டார் என மோகன்ராஜ் கூறியதும் அதிர்ந்துபோன நாக ஷில்பா, என் கணவர் இறந்ததைக்கூட ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என கேட்டபோது ஷில்பாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு மோகன்ராஜ் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன நாக ஷில்பா என் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டுமென கூறி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை