திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் ரமேஷ்குமார் (34), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி தாமலேரிமுத்தூரில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரமேஷ்குமார் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி நித்யா கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். அப்போது, ரமேஷ்குமாரின் மனைவி நித்யாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர், நித்யாவை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மதுபழக்கத்துக்கு ஆளான ரமேஷ்குமார், குடும்பச் செலவுக்கு பணம் கொடுக்காமலும், நித்யாவின் சகோதரர் அரவிந்தனின் (30), மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்யா, அரவிந்தன், அவரது நண்பர் கணபதி ஆகியோர் ரமேஷ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதையடுத்து, கணபதியும் அரவிந்தனும் தாமலேரிமுத்தூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ரமேஷ்குமாரை மது அருந்த அழைத்துச்சென்றனர். பின்னர் மதுவில் விஷத்தை கலந்து ரமேஷ்குமாரை குடிக்க வைத்தனர். ஆனால், அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததால், ரமேஷ்குமாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து நித்யா, அரவிந்தன் ஆகியோரைக் கைது செய்த காவல் துறையினர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, தலைமறைவான கணபதியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.